ஆன்மிகம்
பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில்

பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில்

Published On 2019-08-17 01:52 GMT   |   Update On 2019-08-17 01:52 GMT
பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் - பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பஞ்சேஷ்டி சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் - பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இத்திருத்தலம் பிரம்மாவினால் மாமுனிவர்களான வசிஷ்டர், கவுதமர், கண்வர் ஆகியோருக்கு தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக காண்பிக்கப் பட்டது. அவர்கள் இங்கு தங்களின் தினசரி தவமுறைகளை கடைபிடித்தனர். அகஸ்திய முனிவரும் இங்கு தங்கியிருந்து கடைபிடிக்க வேண்டிய ஐந்து இஷ்டிகளை கடைபிடித்தார். அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.

இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + இஷ்டி) என வழங்கப்பட்டது. தற்போது பஞ்சட்டி என்றும் அழைக்கின்றனர்.

கோடை காலங்களில் இத்திருத்தலத்தை சுற்றி உள்ள ஊர்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், இவ்வூரில் மேற்பரப்பிலேயே சுவையான நீர் கிடைக்கின்றது. அதனால் இத்தலம் பஞ்சம் தீர்க்கும் “பஞ்சேஷ்டி” என்றும் அழைக்கப்படுகிறது.

யட்ச ராஜனின் சாபவிமோசனம்

ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமான் அங்கிருந் தோருக்கு சிவ தத்துவத்தைப் போதித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமானின் அருகில் பார்வதி தேவியும் அமர்ந்திருந்தாள்.

அங்கிருந்த சுகேது என்ற யட்ச ராஜன் சிவபெருமானிடம் “பெருமானே, பார்வதிதேவியையும் அருகில் வைத்துக் கொண்டு சிவ தத்துவத்தை எங்களுக்கு கூறுவது சரியா?” என்று கேட்டார். சிவபெருமான் புன்னகைத்தார். ஆனால் அருகில் நின்று கொண்டிருந்த முருகப் பெருமானுக்கோ கோபம் வந்து சிவனும் சக்தியும் ஒருவரில் ஒருவர் பாதியென்று அறிந்த பின்னும் இக்கேள்வியைக் கேட்ட சுகேதுவை அசுரனாகப் பிறக்கும்படி சபித்தார்.

இவ்வாறு சுகேது என்ற யட்சராஜன் முருகக் கடவுளால் சபிக்கப்பட்டு அசுரனாகப் பிறந்தான். அவன் ஒரு அசுரப் பெண்மணியை மணந்து கொண்டு மூன்று மகன்களை பெற்று எடுத்தான். அவர்கள் தந்தையின் சாபத்தை பற்றி அறிந்து கொண்டு பார்வதிதேவியிடம் மிகுந்த பக்தி செய்து அரிய வரங்களைப் பெற்றனர். அவர்கள் தங்கள் ஆற்றலை தேவர்களிடத்தில் பரிசோதித்தும், அவர்களைத் துன்புறுத்தியும் வந்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்ட அவரும் அகஸ்திய முனிவரை சுகேது மற்றும் அவன் பிள்ளைகளுக்கு தக்க பாடம் புகட்டும்படி கட்டளையிட்டார்.

அந்த சமயம் சுகேது மூன்று அசுரர்களுடன் போரிட்டு அவர்களிடம் தோற்று பயந்து கடலின் அடியில் ஒளிந்து கொண்டான். சுகேதுவின் மகன்கள் கடலில் ஆழத்தில் ªன்று தனது தந்தையை தேடினர். கடல் உயிரினங்கள் அழிந்தும். கடல் கலங்கியும் பிரளயம் போல் ஆனது. அகஸ்தியர் அவர்களை கட்டுப்படுத்த அவர்களையும் சுகேதுவையும் கடல் நீரோடு விழுங்கி விட்டார். கடல் விழுங்கப் பட்டதால் பூமி வறண்டது. தேவர்கள் கடலை மீண்டும் உண்டாக்க அகஸ்தியரிடம் வேண்டினர். அவரும் கடல் நீரை கடல் இருந்த இடத்திலேயே உமிழ்ந்தார். தன் வாயில் இருந்த மிகுந்த நீரை உமிழ அந்த இடம் தற்போது அகஸ்தியர் தீர்த்தமாக அறியப்படுகிறது.

சுகேதுவும் அவன் புதல்வர்களும் தங்களை மன்னிக்கும்படியும் சாபவிமோசனம் ஏற்படுத்தவும் வேண்டினர். அகஸ்தியரும் அவர்களை இந்த தீர்த்தத்தில் நீராடச் செய்து ஐந்து விதமான வேள்விகளை செய்வித்து சாபவிமோசனம் ஏற்படச் செய்தார். வைகாசி மாத பவுர்ணமி அன்று இந்த தீர்த்தம் அகஸ்தியரால் உருவாக்கப்பட்டதால் ஒவ்வொரு வருடமும் அந்நாளில் அகஸ்தியர் இங்கு எழுந்தருளுவதாக நம்பப்படுகிறது.

விண்ணுலகில் இருந்து சாபம் பெற்று பூமிக்கு வந்த விண்ணோருக்கும், பூமியில் இங்கேயே பிறந்து வாழ்ந்த மக்களுக்கும் ஒருங்கே பிறவிப் பயன் அடையச் செய்த புனிதத்தலம் “பஞ்சேஷ்டி” ஆகும்.

மூலவர் அகஸ்தீஸ்வரர். இச்சிவ லிங்கம் சுயம்பு மூர்த்தியாகும். அகஸ்தியர் காலத்திற்கு முன்பே இங்கு இச்சிவலிங்கம் அமைந்துள்ளது. அம்பாள் ஆனந்தவல்லி முக்கண் உடையவள். திருமேனி பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்டது. தெற்கு நோக்கி அமர்ந்துள்ள திருக்கோலம். இடதுபாதம் முன் வைத்துள்ளவாறு காணப்படுகிறது.

அகஸ்தியரின் வேண்டுதலால் அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்தும், மூன்று கண்களினால் அசுர, தீய சக்திகளையும் அழித்ததனால் அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அம்பாளின் அருள் தீய சக்திகளையும் நம்முடைய செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.

இந்த சத்ருசம்ஹார அம்பாளை குளிர்விக்க அம்பாளுக்கு முன்புறம் மிகப்பெரிய “துர்க்காயந்திரம்” பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்ப வடிவம் ராஜகோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது. இந்த முக்கண் ஆனந்தவல்லி அம்பிகையை பற்றி கூறும் வகையில் அபிராமி அந்தாதியிலும், ஆதி சங்கரரின் சவுந்தர்ய லஹரியிலும் வரிகள் அமைந்துள்ளது அம்பாளின் சிறப்பை குறிக்கும்.

அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீர்வதாக நம்பிக்கை உள்ளது.
அம்பிகையின் நேர்பார்வையில் நவக்கிரகங்கள், அஷ்ட திக்பாலகர்கள் அமைந்துள்ளதால் நம்முடைய அனைத்து நவக்கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கி விடும். ராஜகோபுரம் தெற்கில் அம்பாளுக்காகவே அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

இதனால் இத்தலத்தை பரிகாரத் தலம் என்றும் கூறுகின்றனர். அகஸ்தியர் கடைபிடித்த ஐந்து வகையான இஷ்டிகளில் ஒன்று மானுஷ இஷ்டி. இது சகமனிதருக்கு உணவு, உடை அளிப்பதாகும். ஆகவே இங்கு உணவு அளிப்பது மிகச் சிறந்தது. இங்கு இப்படி உணவளித்தால் நமக்கு நன்மைகளும் பிறவிப் பயனும் கிடைக்கும் என்று அகஸ்தியரின் ஓலைச் சுவடிகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

திருமணத் தடை நீங்க துர்கா யந்திரம் அமைந்துள்ள சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லாவித திருமணத் தடைகளும் நீங்கும்.

ஒரு ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தால், அத்திருத் தலம் பரிகாரத் தலமாகக் கருதப்படும் என்பது ஐதீகம்.
பஞ்சேஷ்டி திருக்கோவிலின் ராஜகோபுரமும் தெற்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சத்ரு சம்ஹாரியாக விளங்கும் அன்னை ஆனந்தவல்லிக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சேஷ்டி திருத்தலம் பரிகாரத் தலமே ஆகும்.

இத்தலத்தில் வழிபாடு செய்தால், சத்ரு தோஷம், திருமண தோஷம், முன்னேற்றத் தடை தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்கள் நீங்குவதுடன், மீண்டும் பிறவாத பேறினையும் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சிறந்த பஞ்சேஷ்டி திருத்தலம் அகத்தியர் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் திருக்குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்து தீபங்கள் ஏற்றி பரிகார சங்கல்பங்கள் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். அகண்ட தீபமும் ஏற்ற வேண்டும்.

Tags:    

Similar News