ஆன்மிகம்
செங்கரை காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில்

செங்கரை காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில்

Published On 2019-08-15 01:42 GMT   |   Update On 2019-08-15 01:42 GMT
திருவள்ளூர் மாவட்டம், சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவில் இது ஆகும்.

இப்பகுதி அடர்ந்த காடாக இருந்ததாம். இருளர் இன மக்கள் புற்றில் கைவிட்டு பாம்பு உள்ளதா? என பார்க்க முற்பட்டபோது ஏதோ? ஒரு கல் கையில் பட்டதாம். எனவே புற்றை உடைத்து பார்த்தபோது அதில் அம்மன் சிலை இருந்ததாம். இதனால் இருளர் இன மக்கள் ஊரில் சென்று புற்றின் உள்ளே அம்மன் சிலை இருப்பதை கூறினார்களாம். எனவே, கிராம மக்கள் திரண்டு வந்து அந்த அம்மன் சிலையை ஊரினுள் கொண்டு சென்று வைக்க முற்பட்டார்களாம். அப்போது சிறுமி மீது அம்மன் அருள் வந்து ஊரினுள் என்னைக் கொண்டு சென்று வைக்க வேண்டும் என்றால் ஒரு அடிக்கு,ஒரு காவு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாம்.

இதனை ஏற்று கிராம மக்கள் காவு கொடுத்த வண்ணம் அம்மனை ஊரினுள் கொண்டு செல்ல முயற்சித்தார்களாம்.ஊர் எல்லையில் உள்ள காவு கொள்ளை என்ற இடத்திற்கு வந்தபோது,காவு அனைத்தும் தீர்ந்து விட்டதாம். இதனால் அம்மன் மீண்டும் எடுத்த இடத்திற்கே சென்று அமர்ந்து விட்டதாம். இதனால் இந்த அம்மனை காட்டுச் செல்லியம்மன் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.அம்மன் இருக்கும் இடத்தில் வேத கொடி உள்ளது. இது இந்த அம்மன் கோவிலுக்கு பந்தல் போன்று படர்ந்துள்ளது. இந்த அம்மன் ஏழு ஊருக்கு கிராம தேவதையாக விளங்குவதாக கூறப்படுகிறது.

‘‘ராஜராஜ சோழனால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. அதுக்கான வரலாற்று ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க. போர் சமயங்களில், சோழ மன்னர்கள் இங்கே வந்து செல்லியம்மனைக் கும்பிட்டுத்தான் போருக்குப் போவாங்கன்னு, பெரியவங்க சொல்லுவாங்க. அன்னையின் நவசக்தி வடிவங்களில், இங்கே பத்ரகாளி வடிவத்தில் செல்லியம்மன் எழுந்தருளி இருக்கிறாள்.

பிரம்மாண்டமான உருவம். மெய்சிலிர்க்க வைக்கும் ஆகிருதி. ஏழரை அடி உயரம், ஆயுதங்கள் தாங்கிய பத்துக் கரங்கள், அசுரர்கள் மூவரை சம்ஹாரம் செய்த நிலையில் வீரத் திருக்கோலம் காட்டுகிறாள் செல்லியம்மன். அன்னையைத் தரிசிக்கும் அக்கணத்தில் நம்மையுமறியாமல் சிலிர்த்துப்போகிறது உடம்பு. பக்திப் பெருக்கில் கண்களில் நீர் சுரக்க, கரங்கள் இரண்டும் தாமாகவே இணைந்து வணங்குகின்றன அந்தத் தாயை!

‘‘பல பேருக்கு இது குலதெய்வம். அதனால் ஆண்டு முழுவதும் குலதெய்வ வழிபாடு நடக்கும். இங்கு ஆடியும் பங்குனியும் ரொம்ப விசேஷம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மாவுக்குச் சந்தனக் காப்பு அலங்காரம் ரொம்ப விசேஷம். அப்போ பார்க்கணுமே இந்த செல்லியம்மாவை... அவங்க உயரத்துக்கும் அந்த அலங்காரத்துக்கும் அப்படி ஓர் அழகா இருக்கும். முத்து முத்தாக அம்பாளுக்கு வியர்த்துக் கொட்டும். துண்டால் ஒற்றியெடுக்கும் அளவுக்கு வியர்த்தாலும், சந்தனம் கரையாது. அது ஓர் அதிசயம் இங்கே!

ஆடி மாசம் பல பேர், குலதெய்வ வழிபாட்டுக்கு வருவாங்க. நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபடுவாங்க. அப்புறம் இங்கேயே ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கிளம்பிப் போவாங்க. திருமண பிராப்தி, குழந்தை வரம், தொழிலில் வெற்றின்னு பல பிரார்த்தனைகளுக்காகப் பக்தர்கள் இங்கே வந்தாலும், குழந்தைப்பேறு வேண்டி வர்றவங்க அதிகமாக உள்ளனர்.’’

இக்கோவிலின் அருகே உள்ள குளத்தில் தண்ணீர் கடுமையான வறட்சி காலத்திலும் வற்றுவது இல்லையாம். இந்தக் குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் 3,5,7,9,11 என்று தன்னால் முடிந்த அளவு கோவிலை வலம் வந்து இந்த அம்மனை தரிசிக்கும் ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு வேண்டுதல் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வேண்டுதல் நிறைவேறும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் இக்கோவிலுக்கு முறையே 3,5,7,9,11 வாரங்கள் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

இக்கோவிலுக்கு, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.கோவில் குளத்தில் நீராடி வேப்பமர பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு காட்டுச்செல்லியம்மனை தரிசனம் செய்தோருக்கு குறைகள் நிவர்த்தி ஆவது உறுதியாம்.இதன் பின்னர் பக்தர்கள் இதற்குப் பரிகாரமாக யானை மற்றும் குதிரையை பரிவார மூர்த்திகளாக சமர்ப்பிப்பதும் உண்டாம்.

அசைவ பக்தர்கள் கடாவெட்டி, மொட்டையடித்து,பொங்கல் வைப்பதும்,சைவ பக்தர்கள் என்றால் பால் பொங்கல் வைத்து மொட்டை அடிப்பார்களாம். இக்கோவிலுக்கு காலையில் இருந்து மாலை 6 மணி வரையில் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்களாம் அதன் பின்னர் அம்மன் வீதி உலா செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் இக் கோவிலுக்கு இரவு நேரங்களில் பக்தர்கள் வருவது இல்லையாம். கோவிலுக்கு கோபுரம் அமைக்கலாம் என்று கற்கள் கொண்டு வந்து நான்கு மூலைகளிலும் நட்டுவைத்து ஏற்பாடு செய்த போது அந்தக்கற்கள் அனைத்தும் சரிந்து விழுந்ததாம்.இதனால் இந்தக் கோவிலுக்கு கோபுரம் அமைக்கவில்லை. நுழைவு வாயில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. வேதக் கொடிப்பந்தலே தொடர்ந்து பக்தர்களுக்கு நிழல் தந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு நாள்தோறும் காலையில் மட்டுமே அபிஷேகம் ஆராதனை நடைபெறும். மற்றும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.மேலும், ஜனவரி மாதம் முதல் நாள் மட்டும் சிறப்பு பூஜைகள்,சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

கோயிலை விரும்பாத செல்லி

அம்மனுக்குக் கோயில் கட்ட உத்தரவு கேட்டபோது, அம்மனின் விருப்பம் கோயில் கட்டுவதல்ல என்பதை உணர்ந்தனர் மக்கள். புற்று நீக்கி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனர். அம்பாள் அனுமதிக்க, ஒரு வியாழக்கிழமையில் புற்றை சிறிது சிறிதாக அகற்ற தீச்சுடர் மகுடமும், நான்கு கரங்களும், சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் சர்வ ஆபரணம் சூடியவளாய் காட்சி தந்தாள்.

அன்று முதல் அந்த இடத்திலேயே வேதைக்கொடிப் பந்தலின் கீழ் ஜன்னி, கொஞ்சை, கருங்காலி, வில்வம், தும்பி போன்ற மூலிகைச் செடிகள் சூழ இருந்து, அருள் செய்துவருகிறாள். தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும். ஆடி மாதம் காய்கறி சீர் கட்டு என்னும் காய்கறி அலங்காரமும் கூழ் வார்த்தலும், சித்திரை 1-&ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்தால் வடை செய்து மாலையாக்கி அம்பாளுக்குச் சார்த்தி வழிபட்டு பக்தர்களுக்கும் ஊருக்கும் விநியோகம் செய்யும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.

இக்கோவிலின் பூசாரியாக சீனிவாசன் உள்ளார். சூளைமேனியிலிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோ மட்டுமே இயக்கப்படுகிறது. சூளை மேனியிலிருந்து செங்கரை கோவில் வரையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சிறப்பு பேருந்துகள் தற்போது நிறுத்தப் பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.எனவே இந்த சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பக்தர்களும், இப்பகுதி கிராமம் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிலின் செயல் அலுவலரின் செல்: 94980 70760,96771 55245.


ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல்

ஆடி மாதத்தை முன்னிட்டு காட்டுச் செல்லியம்மன் ஆலயத்தில் தினமும் பக்தர்கள் வேண்டி கொண்டு கூழ்வார்த்தல் செய்து வருகிறார்கள். இதனால் இந்த ஆடி மாதம் முழுவதும் காட்டுசெல்லியம்மன் ஆலயத்தில் திருவிழா கோலமாக உள்ளது.

ஆடி மாதம் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை கோவில் நிர்வாகம் சார்பில் கூழ்வார்த்து அதை அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பிறகு பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். இந்த ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம்

காட்டுசெல்லியம்மன் வியாழக்கிழமை அவதாரம் எடுத்தவள் என்று கருதப்படுகிறது. எனவே வியாழக்கிழமை தோறும் காட்டுசெல்லி அம்மனுக்கு காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

பால், தயிர், தேன், சந்தனம், நல்லெண்ணை, வாசனை திரவியப் பொருட்கள், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். விருப்பம் உள்ள பக்தர்கள் வியாழக்கிழமைகளில் அதிகாலையிலேயே அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
Tags:    

Similar News