ஆன்மிகம்
ஆலயத் தோற்றம்

தடைகளை போக்கும் ராமநந்தீஸ்வரம் கோவில்

Published On 2019-08-13 01:52 GMT   |   Update On 2019-08-13 01:52 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமநந்தீஸ்வரம் என்னும் ராமனதீச்சரம், மிகவும் விசேஷமான தலமாகும். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமநந்தீஸ்வரம் என்னும் ராமனதீச்சரம், மிகவும் விசேஷமான தலமாகும். சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர் தொடுத்து, அவனை அழித்தார் ராமன். ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார்.

அவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது நந்தி தேவன் அவரை மறித்து நிற்கிறார். ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்பது அவரின் வாதம். ஆனால் அம்பிகை அந்த சம்பவத்தைப் பார்த்து திகைத்தார். உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து, ராமனை உள்ளே செல்ல வழி விடுகிறார். ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபடுகிறார். அதன் பின் சாப விமோசனம் பெறுகிறார். ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். நந்தி வழி மறித்தும் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கி நின்ற காரணத்தினால், இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை உண்மை என நிரூபிக்கும் வகையில், சோமாஸ்கந்தர் உற்சவமூர்த்தியில் அம்பாள் தனது இடது திருக்கரத்தால் நந்தியை பிடித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சி காணப்படுகிறது.

இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. இமயத்தில் கேதாரம், குஜராத்தில் சோமநாதம், உஜ்ஜனியில் மகாகாளேசம், காசியில் விசுவநாதம், மகாராஷ்டிரத்தில் வைத்தியநாதம், பீமநாதம், நாகேஸ்வரம், த்ரயம்பம், குசுமேசம், மத்தியப் பிரதேசத்தில் ஓங்காரேஸ்வரம், ஆந்திரா ஸ்ரீசைலத்தில் மல்லிகார்சுனம், தமிழ்நாடு ராமேஸ் வரத்தில் ராமநாதம் ஆகியவையே அந்த 12 தலங்கள்.

ராமபிரானால் வழிபாடு செய்யப்பெற்ற ராமேஸ்வரத்தைப் போல, ராமனதீச்சரமும் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. மேலும் இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவதாலும், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினால், இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

இத்தல இறைவனை, ராமநந்தீஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அதே போல் இறைவியையும், கருவார்குழலியம்மை, சூளிகாம்பாள், சரிவார்குழலி என்ற திருநாமங்களில் போற்றுகிறார்கள். சூரிய புஷ்கரணி, சூரிய பூஜை ஆகியவை இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் ஆகும். மகிழ மரம், ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. அம்பாள் சன்னிதிக்கு நேரில் எதிரில் இரண்டாவது பிரகாரத்தில் இந்த தல விருட்சம் இருக்கிறது.

மகிழ மரத்தை தல விருட்சமாக கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘மகிழம்பூவனநாதர்’ என்ற பெயரும் உண்டு. மகிழ மரத்துக்கு என்று தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன. திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்காக சிவபெருமான் காட்சியளித்தது, மகிழ மரத்தின் அடியில் என்று பெரிய புராணம் கூறுகிறது. எனவே இந்த மரம் இருக்கும் இடத்தில் சிவபெருமானின் அருள் பல மடங்காக பெருகி இருக்கும் என்பது ஐதீகம். இத் தலம் ஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயமானது, 32 அடி உயரத்தில் நான்கு தளங்களை கொண்ட விமானத்தோடு அமைந்துள்ளது. இதன் கலசம் செம்பினால் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் பலிபீடம், நந்தி உள்ளது. வலது புறம் அன்னை கருவார் குழலியம்மை, ராமருக்கு தடை நீங்க நந்தியை கையில் பிடித்தது போல், அனைவர் வாழ்விலும் உள்ள இடர்பாடுகளை களைய இன் முகத்தோடு காத்திருக்கிறார்.

இடது புறம் தலவிருட்சம் மகிழமரம் உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால், கரு வறையில் ராமநாத சுவாமி, லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவாச்சாரியார் கற்பூர தீபம் காட்டும்போது லிங்க உருவத்திருமேனியில் ஜோதியை காண முடிகிறது. இவர் ஜோதிர் லிங்கமாய் நமது வாழ்வில் ஒளியேற்றும் வண்ணமாய் அருட் காட்சி தருகிறார்.



கோவிலைச் சுற்றி வந்தால் இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். ஆலயத்தை பிரகார வலம் வந்தால், கணபதி, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன. அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.

அம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது. துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம் உள்ளதால், ‘தென் காளகஸ்தி’ எனவும் போற்றப்படுகிறது.

அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.

துர்வாசர் பூஜித்த லிங்கம் :

இந்த ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பு துர்வாச முனிவர். இவர் அத்ரி மகரிஷியின் மகன் ஆவார். இவர் பல இடங்களுக்குச் சென்று சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளார். இவர் சென்ற இடங்களை எல்லாம், காளகஸ்தி கோவிலுக்கு இணையான கோவில் என்பார்கள். அந்த வகையில் இந்த திருத்தலத்திற்கும் வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளார் துர்வாச முனிவர். அந்த வகையில் இந்தத் திருத்தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துர்வாச முனிவர் பூஜித்த சிவலிங்கம், பைரவர் திருமேனிக்கு அருகில் அமைந்திருக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

அமைவிடம் :

இக்கோவிலுக்கு வர நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் என்ற ஊரில் இருந்து கிழக்கே ½ கிலோமீட்டர் தொலைவில் ராமநந்தீஸ்வரம் உள்ளது. நாகப்பட்டினம் - கும்பகோணம் சாலையில் திருப்புகழுரில் இருந்தும், திருமருகல் என்ற இடத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.

-முத்தாலங்குறிச்சி காமராசு 
Tags:    

Similar News