ஆன்மிகம்
காத்யாயனி ஆலயம்

காத்யாயனி ஆலயம் - குன்றத்தூர்

Published On 2019-08-10 01:23 GMT   |   Update On 2019-08-10 01:23 GMT
சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் அஸ்திவாரமே கண் நிறைந்த கணவன் அமைவது தானே...! கண்+அவன்= கணவன் அமைந்து விட்டால் ஒரு பெண்ணைத் தன் கண் இமை காப்பது போல பாதுகாப்பானே! இதனால் அவளுடைய வாழ்க்கை மங்களகரமாகத் தொடங்கி விடும்.

ஆனால் திருமணம் என்ற ஆயுள் பந்தத்தில் இரண்டு இளம் மனங்கள் இக்காலத்தில் இத்தனை சீக்கிரம் இணைந்து விடுமா என்ன? அதை ஏற்பாடு செய்வதற்குள் சில இடையூறு வரக்கூடும்.அவற்றை நீக்க பல தெய்வ பூஜைகள், ஆலய தரிசனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. திருமணப் பேறு தரும் ஆலயங்களில் சாக்த வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் அம்பிகை ஆலயங்களையே இன்றைய கால கட்டத்தில் பெண்கள் நாடிச் செல்கின்றனர்.
கல்யாண வரம் தரும் காத்யாயனி

அம்மன் வழிபாட்டு முறையில் காத்யாயனி பூஜை மிகவும் பிரசித்தமானது. ஒரு குடும்பத்தில் கன்னிப்பெண் இருந்தால், கல்யாணங்கழிச்சோ என்று முதலில் கேட்டுவிட்டு, “கல்யாணங்கழிக்க காத்யாயனியை பூஜிக்கணும்” என்று கேரளத்து நம்பூதிரிகளும், பண்டிட்ஜிகளும் சொல்லுவார்கள். ஆம் ஒரு பெண்ணுக்குக் கல்யாணத்திற்குத் தடை இருந்தால் காத்யாயனி தேவியைப் பூஜித்தால் அந்தத் தடை உடனே விலகி விடும்.

கேரள மாந்திரீக ரத்தின கல்பத்தில் இதற்கான ஆதாரம் இருக்கிறது. இந்த அம்பிகை வழிபாடு கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருக்கிறது. சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கல்யாணப் பிரார்த்தனைக்கு வருபவர்கள் மூன்று வார தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஆலய சாஸ்திர விதியாக உள்ளது. தினசரி தரிசனம் இருந்தாலும் கல்யாணத்திற்கான வழிபாடு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி நாளிலும் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும்.

மூன்று தரிசனங்களில் முதல் வார தரிசனத்தில் ஸ்ரீ காத்யாயனி சன்னிதியில் அர்ச்சனை செய்து தனது கிரக தோஷங்கள் விலகிட வேண்டிக் கொள்ள வேண்டும். இரண்டாவது தரிசனத்தில் இந்த ஆலயத்தில் உள்ள திருமண மரத்திற்குப் பூஜை செய்து சன்னிதியில் மஞ்சள் காப்பு கட்டி கொள்ள வேண்டும். தேவர், ரிஷிகள், ஆசி பெற்றிட, விருப்பங்கள் நிறைவேற விருட்சபூஜை அவசியம்.

மூன்றாவது வார தரிசனத்தில் ஒரு பெண் ஜன்ம பத்ரிகா பூஜை செய்ய வேண்டும். அதாவது ஜனனம் ஆகும்போது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் கல்யாணம் தடைபடுகிறது. அந்தக் கிரகங்கள் நல்ல இடத்தில் சென்று பெண்ணுக்கு சுபமங்களமான வாழ்க்கை அருளிட தேவியை நவகிரக நாயகியாக நினைத்து அவளது பீடத்தில் ஜன்மபத்ரிகா என்னும் ஜாதகத்தை வைத்து விசேஷ ஆகமபீஜ மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதாகும்.

இந்த மூன்று தரிசனங்களையும் முறையோடு செய்யும் ஒரு பெண் மூன்று பட்சங்களுக்குள் கல்யாண வரத்தை பெறுகிறாள் என்பது ஆலய தரிசனம் செய்த பெண்களின் கருத்தாகும்.

திருமணம் வரம் தரும் யக்ஞம்:

இத்தலத்தில் திருமணபேறு வேண்டி தரிசிக்க வரும் பெண்-ஆண் இருபாலருக்கும் அதிக வயதை தாண்டி இருப்பின் (26 வயதுக்கு மேல்) திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் காமேஸ்வரி துளசியக்ஞம் சுயம்வரகலா, கந்தர்வராஜ யக்ஞம் செய்கிறார்கள். துளசியால் யக்ஞம் செய்து விட்டால் விரைவில் மணமேடை ஏறுவர் என்பது நடந்துவரும் உண்மை.

நிம்ப விருட்ச சிறப்பு:

ஸ்ரீசக்தி கோவிலின்தலவிருட்சம் வெண்மை, கரும்பச்சை, மத்திம பச்சை, கிரிநிம்பம் என்கிற வகைகளில் மத்திம பச்சையும், கிரிநிம்பமும், திருமண மரமும் தலவிருட்சங்களாக இருக்கின்றன.

குழந்தைபேறு மூலிகை:

இத்தலத்தில் பிரதி பவுர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மகாமேரு பூஜை, சவுபாக்கிய ஹோமம், ஸ்ரீ காத்யாயனி புத்ரதா ஹோமம் செய்யப்பட்டு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு (கணவன் மனைவிக்கு) கிரிநிம்ப மூலிகை ஹோமப் பிரசாதத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக புத்திரபேறு இல்லாதவர்கள் இந்த கிரிநிம்ப விருட்ச இலையை உட்கொண்டால் கருவாய் திறந்து பலன் பெறலாம் என்பது மருத்துவ ரீதியான உண்மை ஆகும்.

கல்யாண வரம் வேண்டி பல ஊர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பிரார்த்தனை செய்ய ஆண்களும், கன்னிப் பெண்களும் வந்து வழிபடுகிறார்கள். எல்லா பக்தர்களும் இந்த ஆலயத்தை ‘சக்தி கோவில்’ என்று பயபக்தியோடு அழைக்கிறார்கள். உண்மைதான்! கல்யாண வரம் தருகின்ற சக்தி வாய்ந்த அம்பிகையாக இந்த அன்னை விளங்குகிறாள். நிதி தரும் இரண்டு குபேரன் சிலைகள் சக்தியின் பிரதிமை களாக மேல் தளத்தை தாங்கி நிற்க, அன்னை சக்தி தேவி நாகாபரணத்தோடு காட்சி தருகிறாள். அருகில் கணேசரும், முருகனும் காட்சி தருகிறார்கள். இந்த ஆலயத்தில் மூன்று வெவ்வேறு தேவியர் இரு சன்னிதிகளில் அமர்ந்து அருள் தருகின்றனர்.

முகப்பில் அலங்கரிக்கும் தோரண வாயிலுக்கு நேராகச் சக்தி ஸ்ரீ மங்கள மாரியின் துவார சக்திகளான கங்கை, யமுனை ஆகியோர் நின்றிருக்க தென் கோஷ்ட மேகலை தொடக்கத்தில் தோரண கணபதி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கடன் பெற்று அடைக்க முடியாதவர்களுக்கு, கடன் கொடுத்து திரும்ப பெற முடியாத வணிகர்களுக்கும் இந்த விசேஷ கணபதியை செவ்வாய், சனி சதுர்த்தி தினங்களில் தீபமேற்றி 6 வாரங்கள் அர்ச்சித்து துதி செய்ய பலன் கிடைத்து விடும்.

நலம் தரும் ஜலந்தரா செடி:

விருட்சங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவது உண்மை என்பதால் இங்கே கணவன்-மனைவி பிரிந்து விட்டால் சேர்ந்து விடும் சக்தி வாய்ந்த ஜலந்தரா (குடும்ப நல விருட்சம்) ஞாயிறு, வெள்ளி, பவுர்ணமி நாட்களில் மட்டும் வழங்க ஆலயத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அஷ்டலட்சுமி கோபுர சிறப்பு: கருவறை வெளிசுற்றின் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இதற்கு அஷ்டலட்சுமி கோபுரம் என்றே பெயர்.

திரிசக்ர தரிசனம்: தமிழகத்தின் ஒருநாள் சிறப்பு தரிசன முறைகளில் இந்த சன்னதியும் ஒரு வரிசையில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் என்ற வரிசையில் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. சக்தியை வழிபடப் பூர்வ புண்ணியம் வேண்டும் என்று தன் சவுந்தர்ய லகரியில் எடுத்துரைத்தார் ஆதி சங்கரர். அந்த சக்தி தேவியர் மூன்று திருநாமங்களுடன் ஒரே நேர்கோட்டில் 12 கி.மீ. தொலைவிற்குள் திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள் தருகின்றனர்.

காஞ்சி மாவட்ட எல்லையில் தென் சென்னைப் பகுதியில் தொண்டை மண்டலத்தில் 3 சக்தி தேவியர்கள் 12 ராசியினருக்கும் வாழ்வில் தடைகள் அகன்று ஐஸ்வர்யமான வாழ்வைத் தர அருள்புரிகின்றனர். இந்த அபூர்வ சக்திகளை ஒரே நாளில் தரிசனம் செய்து தலத்திற்கு 3 நெய் தீபங்களை ஏற்றி பிரார்த்தனை செய்வதற்கு திரிசக்கர தரிசனம் என்று பெயர். இந்த சக்தி யாத்திரையை முயற்சி, வெற்றி வியாபாரத்தில் உயர்வடைய ஞாயிறன்றும், காரியத்தடை அகல பவுர்ணமி அன்றும், கடன் தீர்ந்து சொந்த வீடு அமைய செவ்வாயன்றும், தன்யாதி, துர்சக்தி விலக அமாவாசையிலும், தம்பதி கோர் வழக்கு தீர, குழந்தைப்பேறு பெற சனிக்கிழமை அன்றும் செல்வச் சேர்க்கை லட்சுமி கடாட்ச பெற வெள்ளிக் கிமையிலும் தரிசனம் செய்ய வேண்டும்.

கோவில் செல்லும் வழி:

சென்னை மாநகரின் தெற்கு பாகமான குன்றத்தூர் என்னும் புனித தலத்தில் இந்த “சக்தி கோவில்” இருக்கிறது. ‘கோவில் நகர்’ என்றும், செல்வமலி குன்றத்தூர் என்றும் புகழப்படு கின்ற இவ்வூரில்தான் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் அவதரித்தார். பெருமைமிகு குன்றத்தூரில் முருகன் மலைக்கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் தார்சாலை ஓரத்திலும் திரு ஊரகப்பெருமாள் சன்னதிக்கு 20 அடி தூரத்திலும் இந்த ‘சக்தி கோவில்’ இருக்கிறது.

இக்கோவிலுக்கு செல்ல சென்னை பிராட்வேயில் இருந்து 88கே, 60ஏ பஸ்கள் நேரடியாகச் செல்கின்றன. வடபழனியிலிருந்து எம்88, தாம்பரத்திலிருந்து 55ஜே, 66, குன்றத்தூருக்கு பாரிமுனையில் இருந்து சைதை வழியாக 88கே, 60இ, 88ஏ ஆகிய பஸ்கள் செல்கின்றன. பஸ் நிறுத்தத்தில் இருந்து (ஓன்றரை கிலோ மீட்டர்) சக்தி கோவிலுக்கு ஆட்டோ வசதிகள் உண்டு.

11-ந்தேதி தீ மிதி விழா

9-ந்தேதி (ஆடி 24) வெள்ளிக்கிழமை:- காலை 6 மணிக்கு ஸ்ரீதோரண கணபதி பூஜை.
காலை 7.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு திரு மஞ்சன நீராட்டுதல், மகா தீபாராதனை அருட் பிரசாதம் வழங்குதல், அம்மனுக்கு காப்பு அணிவித்தல்- வர்ணித்தல்.
காலை 8.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல், வர்ணித்தல் காலை-மாலை திருக்குட ஊர் வலம்.
மாலை 6 மணிக்கு சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் செய்யும் திருவிளக்கு பூஜை.
10-ந்தேதி (ஆடி 25) சனிக்கிழமை:- காலை, மாலை திருக்குட ஊர்வலம்.
மாலை 6 மணிக்கு சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் நடத்தும் அஷ்டலட்சுமி கோபுரம் சுற்றி தீபவலம். குழந்தைப்பேறு வேண்டி நாகக்கன்னி பூஜை.
11-ந்தேதி (ஆடி 26) ஞாயிற்றுக்கிழமை:- காலை 9 மணிக்கு அம்மனை கரகத்தில் வர்ணித்தல், பாடுதல்.
பகல் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் கூழ்வார்த்தல் திருக்குட ஊர்வலம், அன்ன தானம் வழங்குதல்.
மாலை 6மணிக்கு சக்தியின் மைந்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துதல்.
இரவு 9 மணிக்கு அம்மன் மலர் அலங் காரத்தில் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா.
12-ந்தேதி(ஆடி 27) திங்கட்கிழமை:- மாலை 6 மணிக்கு அம்மனுக்கு விடை யாற்றுதல் விழா நடைபெறும்.
Tags:    

Similar News