ஆன்மிகம்
எல்லம்மன் ஆலயம்

எல்லம்மன் ஆலயம்- திருவல்லிக்கேணி

Published On 2019-08-08 01:35 GMT   |   Update On 2019-08-08 01:35 GMT
திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் எல்லம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மதுரையில் மீனாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, காசியில் விசாலாட்சியாக அருள்பாலிப்பதைப் போல அன்னை பராசக்தி சென்னை திருவல்லிக்கேணியிலே எல்லம்மனாகக் கோவில் கொண்டு திருவருள்பாலித்து வருகிறாள்.

இவள் எல்லையில் இருப்பதால் எல்லையம்மன் எனவும், வீதியில் இருப்பதால் தெருவீதி அம்மன் எனவும், சன்னதியில் இருப்பதால் சந்தியம்மன் எனவும், சோலையில் இருப்பதால் சோலை அம்மன் எனவும், பனையடியில் இருப்பதால் கருக்காத்தாள் எனவும், வேம்படியில் இருப்பதால் வேம்படியம்மை எனவும், ஆலடியில் இருப்பதால் ஆலை அமர்ந்தாள் எனவும், எட்டி மரத்தடியில் இருப்பதால் எட்டியம்மன் எனவும் கூறுவர்.

எல்லம்மன் ஆலயம் கொடி கம்பத்தோடு கூடிய சிறிய ஆலயம்தான். என்றபோதும் எல்லம்மன் தோற்றம் பெரியது. அமர்ந்த நிலையில் சமபந்த சொரூபியாய், ஆஜானு பாகுவாய், கண்டதும் நம்மையும் அறியாமல் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத்தக்க கருணைமுகப் பொலிவோடு காட்சி தருகிறாள் அருள்மிகு எல்லம்மன்.

தன் ஒரு கரத்தில் கொண்ட உடுக்கையால் ஓங்கார ஒலி உண்டாக்கி உயிர்களைப் படைக்கின்றாள் ஓங்காரி. இன்னொரு கரத்தில் கொண்டிருக்கும் திரிசூலத்தால் மாயையை மாய்க்கின்றாள் திரிசூலி, ஒரு கையில் ஞானவாள் கொண்டு அஞ்ஞானத்தை வெட்டி மற்றொரு கரத்தில் உள்ள பொற்கிண்ணத்தால் ஞானப்பால் ஊட்டுகிறாள் ஞானாம்பிகை.

இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 550 ஆண்டுகளாவது ஆகி இருக்கக்கூடும். பக்தர்களுக்கு குறை இல்லாமல் செல்வத்தை வாரி வாரி வழங்குகின்றாள் அம்பிகை. திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் எல்லம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் வீதியில்தான் சீர்மிகு சிறப்புள்ள எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புத்தர்காலத்திலிருந்தே விளங்கும் பழம்பெரும் ஆலயம் ஆகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இங்குக் கோவிலை அடைந்ததும் கொடி மரம் கண்ணில் படும். அதன் பின் கிழக்குமுகமாக நின்ற திருக்கோலத்தில் இந்த எழில் வாய்ந்த எல்லையம்மன் குடி கொண்டு அருளாட்சி புரிவதை காணலாம். இல்லாமையை இல்லை ஆக்குபவள் எல்லம்மன். தனம், கல்வி, உடல் நலம், வீடு பேறு யாவும் தருபவள் எல்லம்மன். செல்வமுடன் செல்வாக்கும் சேர உயர் பதவிகளை அளிப்பவள். எல்லை இல்லாத கருணை கொண்ட எல்லம்மன்.

திருவல்லிக்கேணிப் பகுதியிலே ஒரு மக்கள் தொண்டர், பல காலமாகப் பொதுத் தொண்டில் ஈடுபட்டு வந்தார். இருந்தாலும் அவருடைய உழைப்புக்கு ஏற்ப பதவி பெருமைகள் சேரவில்லை என்பதால் அவருக்கு மன வருத்தம் இருந்து வந்தது. ஒரு வெள்ளிக்கிழமை அன்று எல்லம்மனுக்கு அபிஷேக ஆராதனை புரிந்து, பட்டுப் புடவை சாற்றினார். அம்பிகையின் திருவருளால் அவர் விரும்பியவாறே அவருக்கு பதவி வந்து சேர்ந்தது.

இன்னொரு எல்லம்மன் பக்தர், அம்பிகையின் திருவருளை வேண்டினார். வெளிநாட்டில் வேலை கிடைத்திட வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. நாள் தோறும் அம்பிகையிடம் தன் கோரிக்கையைக் கூறி வழிபட்டார். ஒரு மண்டலம் அவருடைய கோரிக்கையை அம்பிகையிடம் கூறி முறையிட அவர் விருப்பப்படியே துபாயில் வேலை கிடைத்துவிட்டது. பொன்னும் பொருளும் அம்பிகையின் திருவருளால் குறைவறப் பெற்று மகிழும் அந்த பக்தர் அருள்மிகு எல்லம்மனுக்கு திருப்பணிகள் செய்வதற்காக அங்கிருந்தவாறே காசோலை அனுப்பி வைத்தார் என்றால் எல்லம்மனின் திருவருள் எல்லையற்றது தானே.

வெள்ளிக்கிழமை தோறும் அருள்மிகு எல்லம்மன் ஆலயத்துக்கு தாய்மார்கள் கூட்டம் அலைகடலோ என்று எண்ணும்படியாக வருகிறது. சுகாசினி மண்டலியைச் சேர்ந்த தாய்மார்கள் விளக்கு பூஜையும், குங்கும அர்ச்சனையும் செய்து அருள்மிகு எல்லம்மனை போற்றுகிறார்கள். கோரும் வரம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் எல்லம்மனுக்கு இணை எல்லம்மனே என்று சொல்லி அந்த தாய்மார்கள் பூரிப்பதை காணலாம்.

‘‘என் மருமகள், சுகப்பிரசவம் காண வேண்டும் என்று விளக்கு பூஜை செய்தேன், என் கோரிக்கைக்கும் கைமேல் பலன் கிடைத்தது. குழந்தை பிறந்து தாயும் சேயும் சுகமாய் இருப்பதற்கு எல்லம்மனே காரணம்’’ என்று பூரித்துப் போகிறார் அதே தெருவில் வசித்து வரும் அம்மாள்.

இந்துக்கள் அல்லாத பிற சமய மக்களையும் அருள்மிகு எல்லம்மன் கவர்ந்திருக்கிறாள் என்றால் அவள் பேரருள் கருணையை என்ன என்பது? இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, சைனர், புத்தர் என்பது எல்லாம் நாம் போட்டுக் கொண்ட எல்லைக் கோடுதானே. அகிலாண்டேசுவரி, சாதி, மத எல்லைகளை கடந்தவள். அவளுக்கு ஈரேழு புவனமும் தன் வீடே ஆகும்.

எல்லா உயிர்களும் அவளுக்குத் தன் பிள்ளைகள் தானே... ஆகவே தான் பிற மதத்தினர் என்று நாம் சுட்டினாலும் கூட, அவர்களும் கூட, அம்பிகையின் திருவருளை உணர்ந்து வந்து வழிபட்டு வாழ்வு காண்கிறார்கள். இக்கோவிலில் ஆடிமாதவாக்கில் பிரம்மோற்சவம் நடைபெறுவதுண்டு.

13 நாள்கள் வரை நீடிக்கும். இங்கு சில சுமங்கலிப் பெண்கள் வெள்ளிதோறும், திருவிளக்கு பூஜையையும் செவ்வாய் தோறும் சுமங்கலிப் பூஜையையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு நவராத்திரி விழாவும், கந்தசஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெறுவதுண்டு. சித்திரைத் திங்களில் 1008 இளநீர் கொண்ட அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருமணம் நடைபெறவும், பிள்ளைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், கடன்கள் தொலையவும் இப்படிப் பல பிரச்சனைகளுக்காகவும் மக்கள் இந்த அம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம். இப்படிப் பலவித பிரச்சினைகளுக்கும் வெள்ளி அன்று வந்து வழிபட்டால் உடனே வினை தீர்ந்து விடும். கேட்கும் வரமும் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர்.

மேலும் சர்க்கரை நோயுள்ளவர்கள் இக்கோவில் வந்து இந்த எல்லையம்மனை வேண்டிக் கொண்டு சர்க்கரைக் காப்புச் செய்தால் குணமாவது உறுதி என்கிறார்கள். பிறகு அவரவர்கள் தங்களது நிலைக்கேற்றவாறு சந்தனக்காப்பும், மஞ்சள் காப்பும், குங்குமக் காப்பும், கூடச் செய்து வழிபடுவதுண்டு. இவ்வாறு தங்களது வேண்டுதலையைச் செய்து பிரச்சினைகள் யாவும் நீங்கப்பெற்று மகிழ்வுடன் செல்வதைக் காணலாம்.

இவ்வாலயத்திற்கு வந்து ஒருமண்டல கால அளவு 108 பிரதட்சணம் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நிச்சயம் கைகூடும் என்பர்.  இங்கு ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை நாளில் பொங்கல் வைப்பர். அம்மனுக்கு காப்புக் கட்டுவர். அலங்காரம் செய்வர். இந்த அம்மனுக்கு மட்டும் சர்க்கரையால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அது ஒரு சிறப்பு அம்ச வழிபாடாகக் கருதுவர். இத்துடன் நெய்யையும் கலந்து செய்வர். முந்திரிப் பழத்தை வைத்து அம்மனை அலங்கரிப்பதும் சரக்கரை நோயாளிகளின் வழக்கம்.

ஒருசமயம் பரசுராமரால் வெட்டப்பட்ட தாய் ரேணுகாதேவியை ஒரு சலவையாளர் தம் வீட்டில் வைத்துப் பூஜித்து வந்ததாக கூறுவர். அதனால் இக்கோவிலில் அத்தகைய சலவைத் தொழிலாளிக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவ்வாலயத்திய அம்மனும் தம் தலையுடனே தான்காட்சி தருகிறாள். இந்த அம்மனை வேண்டிப் பலர் புதுப்புடவை சார்த்தி மகிழ்வதும் ஒரு சிறப்பாகும். இவ்வளவு சிறப்பும் சீரும் கொண்ட அம்மனை நாமும் வணங்கி வழிபட்டு அவளது அருளாசி பெறுவோம், வாருங்கள்.

எல்லம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம்

சென்னை திருவல்லிக்கேணி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள எல்லம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி வரை விழா நடக்கிறது.
7-ந்தேதி (புதன்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா.
8-ந்தேதி (வியாழக்கிழமை) - காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு நாகவாகனத்தில் சாமி வீதி ஊர்வலம்.
9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
10-ந்தேதி (சனிக்கிழமை)- காலை 8 மணிக்கு கமலத்தொட்டி, இரவு -யானை வாகனத்தில் அம்பாள் வீதி உலா.
11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு அன்ன வாகனத்தில் சாமி வீதி உலா.
12-ந்தேதி (திங்கட்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு இந்திர விமானத்தில் சாமி வீதி உலா.
14-ந்தேதி (புதன்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு-பூத வாகனம், கொடி இறக்குதல்.
15-ந்தேதி (வியாழக்கிழமை)- இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு விழா நடைபெறும்.
16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி விழா, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் மஞ்சள் காப்பு, இரவு இன்னிசை கச்சேரி நடைபெறும்.
Tags:    

Similar News