ஆன்மிகம்
ஆலவட்டம்மன்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலவட்டம்மன் ஆலயம்

Published On 2019-08-07 01:39 GMT   |   Update On 2019-08-07 01:39 GMT
ஆலவட்டம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை சிறப்பை கொண்டது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை நகரம் எவ்வளவுதான் வளர்ச்சி பெற்றாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பை இன்னமும் இழக்கவில்லை. அதற்கு எத்தனையோ சின்னங்கள் உதாரணமாக திகழ்கின்றன. அவற்றில் கிராம தேவதைகளுக்கான ஆலயங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

இன்னமும் மண் மனம் மாறாமல் சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் பாரம்பரிய சிறப்புடன் ஆடி திருவிழா நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தின் இறுதி கட்டத்தில்தான் பெரும்பாலான சக்தி தலங்களில் முக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். அந்த நாட்களில் அந்தந்த பகுதிகள் சக்தி மயமாகவே மாறி விடும்.
அனகாபுத்தூரும் அப்படிதான் மாறிக் கொண்டு இருக்கிறது. அனகாபுத்தூர் பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக காவல் தெய்வமாக இருப்பது ஆலவட்டம்மன். இந்த ஆலயம் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்துக்கு மிக அருகில் இருக்கிறது. அந்த சிவாலயத்தின் வகையறா ஆலயங்களுக்கு உட்பட்ட ஆலயங்களில் ஒன்றாக ஆலவட்டம்மன் ஆலயம் திகழ்கிறது.

ஆலவட்டம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை சிறப்பை கொண்டது. மிக சிறிய ஆலயம்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயத்தை புதுப்பித்து விரிவுபடுத்தி கட்டி இருக்கிறார்கள். ஒரே ஒரு பிரகாரத்துடன் ஆலயம் திகழ்கிறது.

ஆலயத்துக்கு வெளியில் சிறிது இடம் இருக்கிறது. அங்குதான் முக்கிய விழாக்களை நடத்துகிறார்கள். இந்த அம்மன் அனகாபுத்தூரில் எந்த கால கட்டத்தில் உருவானாள்? அவளுக்கு ஆலவட்டம்மன் என்ற பெயர் எப்படி உருவானது? என்பதற்கெல்லாம் ஆதாரப்பூர்வமான சரித்திர சான்றுகள் எதுவும் இல்லை. இதன் மூலம் காலத்தை வென்ற அம்மனாக இந்த அம்மன் கருதப்படுகிறாள்.

சமீப காலமாக இந்த அம்மனின் அருள் புகழ் சென்னை நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவி தெரிய தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்த அம்மன் தன்னை நோக்கி பக்தர்களை ஈர்ப்பது தெரிய வந்துள்ளது. இது ஒன்றே போதும் இவள் எந்த அளவுக்கு சக்தி மிகுந்தவள் என்பதை தெரிந்து கொள்வதற்கு.

மிக சிறிய கருவறையில் ஆலவட்டம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். அந்த அருள் கோலம் பக்தர்களை மெய்மறக்க செய்கிறது. சென்னையில் உள்ள மிக அழகான அம்மன் விக்கிரகங்களில் ஆலவட்டம்மன் விக்கிரகம் மிகவும் தனித்துவம் கொண்டதாக உள்ளது. நான்கு கரங்களுடன் இடது காலைமடித்து, வலது காலை தொங்க விட்டபடி அம்மன் காட்சியளிக்கிறாள்.

ஆலவட்டம்மன் தலை மீது 5 தலை நாகம் படம் விரித்து குடை பிடித்து இருக்கும் காட்சி கம்பீரமாக உள்ளது. இந்த வடிவத்தில் ஆலவட்டம்மனை தரிசிக்கும்போது நமது பாவம் எல்லாம் பறந்து போய் விடும் என்பதை ஐதீகமாக சொல்கிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை எல்லாம் வாரி வழங்கும் ஆலவட்டம்மன் மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த ஒரே வடிவமாக தனது பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டு இருக்கிறாள்.

அதாவது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் ஒன்றுபட்ட சொரூபமாக திகழ்கிறாள். ஆலவட்டம் மனை தலைதாழ்த்தி பணிந்து உள்ளம் உருகி கண்ணீர் சிந்த வேண்டிக் கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேற்றி தருவாள். தனம், தானியம், கல்வி, அறிவு, புகழ், ஆயுள், ஆரோக்கியம், அமைதி, தன்னம்பிக்கை போன்ற செல்வங்களை ஆலவட்டம்மனை நம்பி வழிபட்டால் நிச்சயம் பெறலாம்.

ஆலவட்டம்மன் சிலை முன்பு சிரசும் இடம் பெற்றுள்ளது. இந்த சிரசுக்கு தினமும் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்கிறார்கள். இந்த மஞ்சள் காப்பு அலங்காரம் மற்ற எந்த ஆலயங்களிலும் இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறுவதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆலயத்தில் தகடு வேய்ந்த கொடி மரம், கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், விநாயகர், ஆலவட்டம்மன், சப்த கன்னியர்கள், அன்னமார்கள், நாகாத்தம்மன், காத்தவராயன் மற்றும் பரிவார தேவதைகள் புதிதாக அமைத்து அனைத்து மூர்த்திகளுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாலயத்தில் வடக்கு திசையை நோக்கியுள்ள ஆளவந்த விநாயகர் மற்றும் அரசமரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரார்த்தனை களும், நேர்த்திக் கடன்களும்:- அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி, திருமணவரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவை கிடைக்கிறது. மேலும் இங்கு குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டுவது இத்திருத்தலத் தின் சிறப்பாகும். இவ்வாலயத்தில் அம்மை வார்த்தவனுக்கு தீர்த்தம் வழங்குவது தனி சிறப்பு.

இவை தவிர பொங்கல் வைத்தல், புடவை சாத்துதல், வேப்பஞ்சேலை, அங்கப் பிரதட்சணம், கண்டதீபம், அலகு குத்துதல், முடி காணிக்கை மற்றும் தீ மிதித்தல் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாக பக்தர்களால் அம்மனுக்கு செலுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி இவ்வாலயத்தில் மூலவர் அம்மனுக்கு விசேஷ மஞ்சள் காப்பும் உற்சவர் அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்காரமும் சிறப்பு வாய்ந்த பூஜையாகும்.

திருவிழாக்கள்:

• ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி அன்று மாபெரும் பால் குட விழா இவ்வாலயத்தில் வெகு விமரிசையாக நடை பெறும்.
• ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷங்கள் என அமர்க்களப்படும் ஆலயம்.
• இவ்வாலயத்தில் ஆடி மாதம் நான்காவது வாரம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது நாள் கொண்ட சிறப்பு மாபெரும் தீமிதி திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு.
• இத்திருக்கோவிலில் தீமிதி திருவிழா அன்று திருவீதி உலா வலம் வரும் ஆலவட்டம்மன் ஆலய சக்தி கிரகம் மிகவும் சிறப்புடையதாகும்.
• ஆடி 6-ம் வாரம் அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகம், சாந்தி பூஜை நடைபெறும்.
• நவராத்திரி விழா, மாசி மகம், தீர்த்தவாரி உற்சவம், ஜனவரி மாதம் மாபெரும் சமபந்தி போஜனம், கும்பாபிஷேக பூர்த்தி விழா மற்றும் மார்கழி பூஜை ஆகியவை ஆலய விழாக்கள் ஆகும்.
• இத்துடன் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உற்சவர் அம்மனுக்கு தாலாட்டு மற்றும் விஷேச பூஜை நடைபெறும்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் ஆடி மாத திருவிழாக்களில் அம்மனுக்கு நடத்தப்படும் வளையல் அலங்காரம் மிகவும் புகழ் பெற்றது. வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட உள்ளது.

அதுபோல இந்த தலத்தில் நடைபெறும் வேப்பஞ்சேலை வழிபாடும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேப்பஞ்சேலை வழிபாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேப்பஞ்சேலை வழிபாடு செய்ய உள்ளனர்.
ஆடு, மாடுகளுக்கு வேப்பஞ்சேலை செலுத்தும் பக்தர்களின் ஆடு, மாடுகள் மதியம் 3.00 மணிக்கு மேல்தான் அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் ஆற்றங்கரையில் காப்பு கட்டப்படமாட்டாது. கோவிலில் மட்டுமே காப்பு கட்டப்படும். மொத்தத்தில் ஆடி மாதம் இந்த ஆலயத்தில் ஆடித் திருவிழாக்களால் களை கட்டி இருக்கும்.

ஆலவட்டம்மன் ஆலய ஆடி திருவிழா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பாக அருள்மிகு ஸ்ரீ ஆலவட்டம்மன் ஆலயம் என்ற பேஸ்புக் பக்கத்திலும் சென்று பார்க்கலாம்.
Tags:    

Similar News