ஆன்மிகம்
நரசிம்மர்

நரசிம்மர் குடைவரை கோவில்

Published On 2019-07-25 04:51 GMT   |   Update On 2019-07-25 04:51 GMT
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்கும்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் தங்களுடைய நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஏதேனும் உபாயம் சொல்லவும் என்று கேட்டார். அப்போழுது எம்பெருமான் ஸ்ரீசைலம் எனும் சேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.

அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிகிறாள். இக்கால கட்டத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மூர்ச்சையை (மயக்கம்) தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து வந்தார்.

யுத்தம் முடிந்த பிறகு அதனைக் கொண்டு இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வரும் வழியில் கண்டகி நதியில் நீராடும்போது அவருக்கு எம்பெருமானின் திரு உருவாகிய (திருமூர்த்தி) சாளக்கிராமம் கிடைக்கப் பெற்றார். மிகவும் ஆனந்தத்தில் அகமகிழ்ந்து தனக்கு ஆராதிக்க கிடைத்த எம்பெருமானின் சாளக்கிராமத்தை எடுத்துக் கொண்டு வருகின்ற தருவாயில் சூரியோதயத்தின் வருகையை அறிந்து அனுஷ்டானம் செய்ய மகாலட்சுமி தவமியற்றும் கமலாலய குளத்திற்கு வந்து, அன்னை ஸ்ரீமகாலட்சுமியின் திருக்கரங்களில் சாளக்கிராமத்தை வைத்திருக்க கொடுத்து விட்டு அனுஷ்டானம் செய்யச் சென்றார்.

ஸ்ரீராமஜெயம் ஜபம் முடித்ததும் திரும்ப தாயாரிடம் சாளக்கிராமத்தை கேட்க, தாயாரும் கனம் தாங்காமல் கீழே வைத்துவிட அது மலையாக (பர்வதமாக) மாறிவிட்டது. ‘நீ பராகிரமசாலி என்பதால் நீயே எடுத்துக் கொள்’ என்று தாயார் கூறினார். தாயாரின் வாக்கிற்கிணங்க ஆஞ்சநேயசாமி தன் வாலால் மலையை பெயர்க்க முற்படுகையில் ஸ்ரீநரசிம்ம அவதாரமாய் மஹாலட்சுமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் சேவை சாதிக்கிறார். நீ கொண்டு வந்த சாளக்கிராமத்தினால் இங்கே ஒரு தலம் ஏற்பட்டதால் நீயும் இங்கேயிருந்து என்னை ‘ஆராதிப்பாயாக’ என்று அருளினார்.

தலச்சிறப்பு:


கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் குடையப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ள இரண்டு குடவரை கோவில்கள் இந்நகரில் உள்ளன. இந்த நகரின் நடுநாயகமாகத் திகழும் நாமகிரி என்னும் சாளக்கிராம பர்வத மலையில் கீழ்ப்புறம் அருள்மிகு அரங்கநாதர், கார்க்கோடக சயனத்தில் காட்சியளிக்கிறார். மலையின் மேற்புறம் அருள்மிகு நரசிம்மசாமி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.

இங்குள்ள நரசிம்மர் ஸ்ரீவைகுண்ட நாராயணர், ஹிரண்ய சம்ஹாரமூர்த்தி வாமன அவதாரம் ஸ்ரீவராகமூர்த்தி ஆகிய திருவுருவங்கள் அற்புத சிற்ப வேலைபாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.



இத்திருத்தலம் மகாவிஷ்ணுவின் அம்சமாக ஒரே கல்லால் ஆன நாமமலையாக கோவிந்தன் பக்த பிரகலாதனைக் காக்க இரணியனை வதம் செய்து, அதனால் ஏற்பட்ட வெப்பம் தணிய மகாலட்சுமியாகிய நாமகிரித் தாயாரின் வேண்டுதலுக்கு மனம் இரங்கி, இத்திருத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் இருள் அகற்றி ஒளி ஏற்றுகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெயர் பெற்று விளங்கும் இத்திருத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகும். இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்கும்.
Tags:    

Similar News