ஆன்மிகம்
கச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில்

கச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில்

Published On 2019-07-08 01:40 GMT   |   Update On 2019-07-08 01:40 GMT
இத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.
(அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலினுள் உள்ள சந்நிதி திவ்யதேசம்)

இத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.

நிலாத் துண்டப் பெருமாள் நின்றத் திருகோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் அழகிய திருமேனி கொண்டு, சேவார்த்திகளுக்கு அருள்பாலித்துக் கொண்டுள்ளார்.

ஒரு கற்பக் காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிர்தத்தைப் பெறவேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் சுற்றிப் பிணைத்து, அதன் தலைப்புறம் அசுரர்களும், வால்புறம் தேவர்களும் நின்று இழுத்துக் கடைந்தனர்.

அப்படிக் கடையும்போது வாசுகி வலிதாங்காமல் விஷம் கலந்த பெருமூச்சு விட்டான். அவ்விஷமானது கடலிலே கலக்கும் போது ஆழ்கடலிலிருந்து கொடிய விஷம் வெளிப்பட வெப்பம் தாளாமல் அனைவரும் ஒடினர். அப்படியும் முடியாமல் அவர்களின் தேகம் கருத்தது.

தேவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாலின் உருவமும், அவ்விஷ வெப்பத்தால் கரிய நிறத்தை அடைந்துவிட்டது. தாம்கரிய நிறமாகிவிட்டதை கண்டு மனம் வருந்திய திருமால் இந்தத் துன்பம் காஞ்சிப்பதியை அடைந்து அழகிய லிங்கம் ஒன்றை நிறுவி பக்தியுடன் ஈசனை வழிபட்டார். அவரால் நிறுவி வழிபடப்பட் அழகிய சிவ லிங்கத் திருமேனிதான் கண்ணேசலிங்கம் ஆகும்.

திருமாலின் வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் காட்சி அளித்து, துளப மார்பினை உடையவனே! உன்னை வருத்திவரும் வெப்பத்தின் கொடுமை நீங்க யாம் ஒரு வழி கூறுகிறோம் எனச் சொல்லி, மாவடி நிழலிலே எழுந்தருளியுள்ள எம் சந்நிதிக்கு வந்தாயானால், இளம் சந்திரனுடைய குளுமை பொருந்திய கிரணங்கள் வீசும் இடத்திலே இருந்து அதன் குளிர்ச்சியால் துன்பம் நீங்கப்பெறுவாய் என்று அருளினார்.

சிவபெருமான் அருளியபடியே திருமால், பிறைச் சந்திரனுடைய குளிர்ச்சிப் பொருந்திய கிரணங்கள் விழும் இடத்தை அடைந்து அங்கே இருந்தவாறு இறைவனைத் துதித்தார். அக்கணம் அவரை வதைத்து வந்த கொடிய வெப்பத்தின் வருத்தம் நீங்கப் பெற்றார்.

அன்று முதல் கச்சி நிலாத் துண்டப் பெருமாள் என்ற பெயரோடு திருமால் எழுந்தருளியிருக்கிறார்.

Tags:    

Similar News