ஆன்மிகம்

குறைதீர்க்கும் அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம்

Published On 2019-04-05 02:20 GMT   |   Update On 2019-04-05 02:20 GMT
சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மகிஷாசுரன், கொடிய அசுரன். அவன் பிரம்மனை நோக்கித் தவமிருந்தான். அவரிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான், தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட, ‘அவன் ஒரு பெண்ணால் மரணமடைவான்’ என சபித்தார் பிரம்மா. பின்னர் பிரம்மா பராசக்தியிடம் பிரார்த்தனை செய்தார்.

பராசக்தி தன் உடலில் இருந்து பிராமி, வைஷ்ணவி, இந்திராணி, மகேஸ்வரி, கவுமாரி, வராகி என ஆறு தேவிகளைத் தோற்றுவித்தாள். ஆறுபேரும் மகிஷனுடன் போரிட்டனர். அவனை வெல்ல இயலவில்லை. கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணில் இருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார்.

பத்ரகாளியின் தோற்றத்தைக் கண்ட பார்வதி, அவளை சுயரூபம் கொள்ளும்படி செய்தாள். அவளே சாமுண்டி.

அவள், பார்வதியை பணிந்து அசுரனை அழிக்க அருள்புரியும்படி வேண்டி நின்றாள்.

பார்வதி, “உனக்கு என் அருள் என்றும் உண்டு. நீயே இந்த ஆறு பேர்களுக்கும் தலைவியாய் இருந்து அசுரனை அழிப்பாய். இந்த உலகைக் காப்பாய். இனி நீங்கள் ஏழு பேரும் சப்தமாதர் என அழைக்கப்படுவீர்கள்” என அருளினாள்.

பின், இவர்களை எதிர்க்க ரக்த பீஜன் என்பவன் வந்தான். அவனுடன் சப்தமாதர்கள் போர் புரிந்தனர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும் சாமுண்டி பருகினாள். அவன் ரத்தம் வற்றியது. ரக்தபீஜன் வதம் முடிவுக்கு வந்தது. சப்தமாதர்களை பாதாள உலகுக்கு அனுப்பிவிடுமாறு பைரவருக்கு சிவபெருமான் கட்டளை இட்டார். சப்தமாதர்களுக்கு கடும் பசி. எனவே அவர்கள் அங்கு கண்ணில் பட்டதை எல்லாம் எடுத்து உண்டார்கள். நரசிம்மர் இதைக் கண்டார். அவர் சப்தமாதர்களின் தீய குணங்களை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக மாற்றினார்.

இப்படிப்பட்ட சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. ஆலயம் வடக்கு நோக்கி இருக்கிறது. முகப்பைக் கடந்ததும் நீண்ட பிரகாரம். அடுத்து மகா மண்டபம். மகா மண்டபத்தின் வலது புறம் விநாயகர், முருகன் திருமேனிகள் உள்ளன.

திருச்சுற்றின் மேற்கு பகுதியில் அய்யனார், ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் அடுத்துள்ள கருவறையில் சப்தமாதர்கள் வடக்கு திசை நோக்கி வரிசையாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர். அற நிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் 400 வருடங்களை கடந்த மிகப் பழமையான ஆலயம் ஆகும்.

வண்ண வண்ண உடைகளில் இந்த சப்தமாதர்களை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தம் குல மக்களை மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைவரது குறைகளையும் களைந்து அவர்களை வளமுடன் வாழ வைப்பதில் இந்த சப்தமாதர்களுக்கு நிகரில்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

அமைவிடம் :


துறையூரில் உள்ள இந்த ஆலயம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது. துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆலயம் செல்ல நகரப் பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளது.
Tags:    

Similar News