ஆன்மிகம்

அற்புதங்கள் தரும் திருவாமாத்தூர் கோவில்

Published On 2019-03-01 02:27 GMT   |   Update On 2019-03-01 02:27 GMT
தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது திருவாமாத்தூர் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது திருவாமாத்தூர் ஆகும். நந்தியம் பெருமான் பூலோகத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் ஒரு முறை பசுக்கள் பலவற்றுடன், பம்பா நதிக்கரையில் உள்ள வன்னி வனத்திற்கு சென்றார். அங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்த அபிராமேஸ்வரரை வணங்கி பல நாட்கள் தவம் புரிந்து கொம்புகளைப் பெற்றார். எனவே இந்த தலம் ‘ஆமாத்தூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘திரு’ என்பது தெய்வத் தன்மை பொருந்திய வார்த்தை என்பதால், ‘திருவாமாத்தூர்’ என்று வழங்கப்படலாயிற்று.

இந்த ஆலயத்தை வட மொழியில் ‘கோமாதுபுரம்’, ‘கோமாதீஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள். சைவ சமயக் குரவர்களில் மூன்று பேர், இந்த ஆலயத்தைப் பற்றி திருப்பதிகங்கள் பாடிஉள்ளனர். அருணகிரிநாதரும் இந்த ஆலயம் பற்றி செய்யுளும் இயற்றியுள்ளார். அதில் இந்த தலத்தை ‘மாதை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆலயம் தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றினாலும் சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அபிராமேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மிகவும் பழமையான திருத்தலமாக இது இருப்பதை, நந்தியம் பெருமானின் தல வரலாறு மூலமாக அறியமுடிகிறது. கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தின் மீது, சந்திரப் பிறை போல, பசுவின் கால் குளம்பின் சுவடு காணப்படுவது சிறப்பு அம்சம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. இந்த இறைவன் சற்று இடதுபுறமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறார் என்பது விசேஷமானது.

ஆலயத்தின் உள்ளே அஷ்ட லிங்கங்கள், அதாவது எட்டு மூர்த்திகள் அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்க மூர்த்தி (அபிராமேஸ்வரர்), ராமபிரானின் வேண்டுகோள்படி அனுமன் கொண்டு வந்த லிங்க மூர்த்தி (அனுமதீஸ்வரர்), சகரஸ்ர லிங்கம், குபேரலிங்கம், அண்ணாமலையார், காசி விஸ்வநாதர், வாயு திசையில் உள்ள வாயு லிங்கம், ஈசான மூர்த்தி ஆகிய லிங்கங்கள் பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும்.

அபிராமேஸ்வரர் திருக்கோவில் கிழக்கு நோக்கியும், சற்று வடப்புறம் தள்ளி நேராக மேற்கு நோக்கி முத்தாம்பிகையம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இவர்கள் இருவரையும் வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறை கோஷ்டத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் லிங்கோத்பவரும் வீற்றிருக்கிறார்கள். லிங்கோத்பவரை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் நன்மைகள் பலவும் வந்து சேரும்.

இந்த ஆலயத்தில் திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. இந்தப் பாறையின் முன்பாக நின்று பொய் சொல்பவர்கள், தேவர்களாக இருந்தாலும் அவர்கள் மீளாத துன்பக் கடலில் வீழ்வார்கள் என்பது ஐதீகம். எனவே பொய் சாட்சியால் சிக்கலில் இருக்கும் வழக்குகள் பலவும், இங்கு வந்து தீர்க்கப்படுவது கண்கூடாக நடக்கும் செயலாகும்.

இத்தல இறைவனை அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு, பராசரர், விசுவாமித்திரர், வியாசர் ஆகிய ஏழு முனிவர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அம்பிகை, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், நாரதர், உரோமசர், பிருங்கி முனிவர், மதங்க முனிவர், பன்னிரு கதிரவர்கள், அஷ்டவசுக்கள், மகாகாளன், ராமபிரான், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், இரட்டை புலவர்கள் முதலானோரும் இத்தல இறைவனை வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.

முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் (கி.பி.1012), சீரங்க தேவ மகாராயர் (கி.பி.1584) காலம் வரை பேரரசர்- சிற்றரசர் காலத்து எழு பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. திருக்கோவில் இறைவன் மீது திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களையும், திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் பாடியுள்ளார்கள். இதனால் இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்திற்கு கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம்

விழுப்புரம் நகரில் இருந்து திருவாமாத்தூருக்கு பஸ் வசதிகள் உள்ளன. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆலயம் இருக்கிறது.
Tags:    

Similar News