ஆன்மிகம்

செல்வங்களை அள்ளித் தரும் ஸ்ரீசெல்லியம்மன் கோவில்

Published On 2017-12-28 08:46 GMT   |   Update On 2017-12-28 08:47 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள வீரமாங்குடியில் உள்ளது ஸ்ரீசெல்லியம்மன் கோவில்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், மணலூர் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வீரமாங்குடி. இங்கே வடக்குப் பார்த்த கோயிலில் எட்டுக் கரங்களுடன், காட்சி தருகிறாள் ஸ்ரீசெல்லியம்மன். 

தஞ்சகாசுரனின் மகன்களான தண்டகன், தாரகன், தஞ்சையன் ஆகிய மூவரும் தேவர்களைத் துன்புறுத்தினர். இதைப் பொறுக்கமுடியாத தேவர்கள் ஓடி வந்து, கோடியம்மனிடம் முறையிட்டனர். தன்னுடைய ஆறு சகோதரிகளுடன் கடும் உக்கிரத்துடன் புறப்பட்டுச் சென்ற கோடியம்மன், வெண்ணாற்றங்கரையில் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தாள். 

பிறகு, வெண்ணாற்றாங்கரையிலேயே கோயில் கொண்டாள் ஸ்ரீகோடியம்மன். அவளுடன் அவதரித்த ஆறு சகோதரிகளில் ஐவர், அந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் குடியமர்ந்து, காவல் காத்தனர். செல்லியம்மன் மட்டும் ”எனக்கென்று ஒரு நாடு. எனக்கென்று மக்கள் என தேசத்துக்கு வடக்குப் பகுதியில் குடிகொள்ளப் போகிறேன்” என்றாள். அப்படியே குடிகொண்டவள், இன்றளவும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள். 

தஞ்சகாசுரன் அட்டூழியம் செய்த பகுதி, தஞ்சை தேசம். தரணி போற்றும் தஞ்சை மாவட்டத்தின் வடக்கே வீரமாங்குடி எனும் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசெல்லியம்மன். 

ஸ்ரீசெல்லியம்மனை வணங்கி பதினாறு செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்வோம்!

Tags:    

Similar News