ஆன்மிகம்
ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன்

திருமண வரம் தரும் கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்

Published On 2017-11-11 04:58 GMT   |   Update On 2017-11-11 04:58 GMT
தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று வேண்டும் கன்னிப்பெண்களின் கவலை தீர்க்கும் ஸ்தலமாக உள்ளது கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.

தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று கன்னிப்பெண்கள் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் வேண்டாத தெய்வங்களும் இருக்க முடியாது. இவர்களது கவலையைத் தீர்க்கும் அன்னை கபிஸ்தலத்தில் இருக்கிறாள்.

ஆம்! கீழ கபிஸ்தலத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், நந்தியைக் கடந்தால் மகாமண்டபம் காணப்படும்.

அந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபம் நுழைவுவாசலில் இடதுபக்கம் இரட்டை பிள்ளையாரும், வலதுபுறம் காசி விசுவநாதரும் அருள்பாலிக்கின்றனர்.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஏகாம் பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி காமாட்சி அம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அன்னை அருள்பாலிக்கும் அழகே அழகு.

இறைவனின் கருவறை தேவ கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வட திசையில் துர்க்கை அம்மனும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேல் திசையில் பிள்ளையார், சுப்ரமணியர் சன்னிதிகளும், வட திசையில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

அஷ்டமியில் பைரவருக்கும், சதுர்த்தியில் விநாய கருக்கும், கார்த்திகை நாட்களில் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.



நவராத்திரியின் 10 நாட்களும் இறைவிக்கும், இறைவனுக்கும் தினம் தினம் விதவிதமான அலங்காரங்கள் செய்து பக்தர்களின் மனம் மகிழும்படி செய்கின்றனர். மார்கழி 30 நாட்களும், சோமவாரம், பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பொங்கல் திருநாளில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு. தை முதல் நாள் காவிரியில் தீர்த்தவாரி திரளான மக்களோடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

குழந்தைபேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என இறைவியிடம் முறையிடுகின்றனர். அத்துடன் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வணங்குகின்றனர். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.

அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. 90 நாட்களுக்குள் அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.

கல்யாணமாகாத கன்னிப் பெண்களை தன் பெண்களாய் பாவித்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து அருளும் அன்னை காமாட்சி அம்பிகையை தன் தாயென கன்னியர் போற்றி மகிழ்வதில் வியப்பென்ன இருக்கிறது.

ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம்.
Tags:    

Similar News