ஆன்மிகம்

மிகவும் பழமைவாய்ந்த திரிபுராந்தீசுவரர் கோவில்

Published On 2017-09-27 02:37 GMT   |   Update On 2017-09-27 02:37 GMT
திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில், நகரின் நடுவில் அமைந்து உள்ளது மிகவும் பழமைவாய்ந்த திரிபுராந்தீசுவரர் கோவில்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில், நகரின் நடுவில் அமைந்து உள்ளது திரிபுராந்தீசுவரர் கோவில். மிகவும் பழமைவாய்ந்த இக்கோவில் மூலவரின் பெயர் திரிபுராந்தீசுவரர். அம்மன் கோமதி அம்பாள். தீர்த்தம் தாமிரபரணி. தல விருட்சம் வில்வ மரம்.

பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை உத்தாலன் எனும் திருநாமம் உடைய வேந்தன். சீரும், சிறப்புமாய் ஆட்சி நடத்தி வந்த இந்த மன்னன், ஒருநாள் உப்பரிகையில் தனது மனைவியோடு உலா சென்றான். செல்லும் வழியில் தவத்தில் ஈடுபட்டு இருந்த தவமுனிவர் ஒருவரை தனது அகந்தை மிகுதியால் கேலிப் பொருள் ஆக்கினான். இதனால் வெகுண்ட தவமுனிவர் மன்னனை சபித்தார். மன்னனின் அங்கம் உருக்குலைந்து அவலநிலை அடைந்தது. கண்கள் காட்சியை இழந்தது.

இதனால் மனம் வருந்திய மன்னன், தனது பாழைய நிலையை நினைத்து பலவாறு வருந்தி, முனிவரை வேண்டினான். தவமுனிவர் அவனது வேண்டுகோளுக்கு இணங்கி பொருநை நதிக்கரையில் செண்பக வனத்தில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்தால் இழந்த வனப்பை மீண்டும் பெறலாம் என விமோச்சனம் அருளினார்.

தனது துயர் துடைக்க மன்னன், கவுதம முனிவரை வேண்டினான். தாமரபரணி நதிக்கரையில் ஈசனை வழிபட்டு மன்னன் தனது இழந்த வனப்பை பெற முடியும் என ஞானத்தினால் உணர்ந்த கவுதன முனிவர் பாண்டிய மன்னனையும், பாண்டிமா தேவியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பாளையம் பதிக்கு வந்தார். செண்பக வனத்தின் செழுமை கண்ட முனிவர் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து சிறப்பிக்க நினைத்தார்.

வான்வழியே வடதிசை நோக்கி பயணித்து கொண்டு இருந்த ஆஞ்சநேயரை அழைத்து, காசிக்கு சென்று சிவபூஜை செய்ய சிவலிங்கம் கொண்டு வருக என்று கூறினார். அதன்படி அஞ்சனை குமரனும் காசிக்கு சென்று சிவலிங்கம் கொண்டு வர கவுதம முனிவர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பாண்டிய மன்னனையும், பாண்டிமா தேவியையும் தவமிருக்க செய்து இழந்த தேகப்பொலிவையும், கண்ணொளியையும் பெற்று தந்தார்.

கவுதம முனிவருக்கு காட்சி தந்த ஈசன் வேண்டும் வரம் யாது? என கேட்டார். உடனே கவுதம முனிவர், இத்தலம் என்றும் சிறப்புற்று இருக்க வேண்டும். இங்கு வந்து உன்னை பூஜிப்பவர்கள் எல்லா நலனும் பெற்று இன்புற்று இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதனை கேட்ட இறைவனும் அவ்வாறே ஆகட்டும் என்று வாழ்த்தி வரம் தந்ததாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது.

இக்கோவிலில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 7.15 மணிக்கு கால சந்தி, பகல் 12 மணிக்கு உச்சிக்காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.45 மணிக்கு அர்த்தசாமம், 9 மணிக்கு பள்ளியறை என 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை பிரமோற்சவம், மார்கழி திருப்பள்ளியெழுச்சி, திருவாதிரை, திருக்கார்த்திகை, ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம், கந்த சஷ்டி, ஆடிப்பூரம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளதால் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுடனும் ரெயில், பஸ் போக்குவரத்து வசதி உண்டு.
Tags:    

Similar News