ஸ்லோகங்கள்
திருமூலர்

10 திருமந்திரங்களும்... விளக்கமும்...

Published On 2022-04-21 01:31 GMT   |   Update On 2022-04-21 01:31 GMT
திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து 10 பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-

சுத்தசிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவன்என்று அடிபணிவாரே.

விளக்கம்:-

உலகின் எல்லாப் பொருட்களிலும் இயல்பாகக் கலந்து இருக்கும் சிவபெருமான், குருவாக வந்து உயிரைத் தூய்மை செய்து அருள் வழங்குவதை, அறிவற்றவர்கள் எவரும் அறியமாட்டார்கள். அதைவிடுத்து, அந்தக் குருவும் நம்மில் ஒருவர்தான் என்பார்கள். ஆனால் புண்ணியப் பிறவியான நல் உயிர்கள், சிவபெருமானை இனம் கண்டு, ‘நம் தலைவன் இவர்’ என்று பணிந்து வணங்குவர்.

பாடல்:-

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே.

விளக்கம்:-

ஒரு நாட்டின் இன்பமும், துன்பமும் அந்த நாட்டில் உள்ளவர்கள் செய்யும், நல்ல செயல்களாலும், தீய செயல்களாலும் விளைபவை. அதனால் நாட்டை ஆளும் வேந்தன் நாள்தோறும் ஆராய்ந்து, நல்லவர்களை காத்தும், தீயவர்களுக்கு தண்டனை வழங்கியும் சமுதாயத்தைக் காத்தால், உலகம் நன்கு செழித்து வாழும்.

பாடல்:-

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருளாமே.

விளக்கம்:-

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘அவம்’ என்ற சொல் ‘ஆணை’ என்ற பொருளைத் தருகிறது. அதன்படி ஆணையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியாதவர்கள், எதையுமே அறியாதவர்கள்தான்.

மாறாக ஆணையின் பிறப்பிடம் சிவனின் இருப்பிடம் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆவர். ஆணையும், அதைப்பிறப்பிக்கும் ஈசனும் ஒன்றென உணரும் அருள் அறிவானது, சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

அந்த அருளைப் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆணையையும் சிவமாகவும், அவனின் கட்டளையுமாகவே இருப்பதை உணர்ந்துகொள்வார்கள்.

பாடல்:-

போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறைஓர் சிவயோகத்தை
ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே.

விளக்கம்:-

இறைவன் திருவடியை நான் வழிபடுகின்றேன். அந்தப் பெருமானை புகழ்கின்றேன். அவன் அறிவுறுத்திய ஞானத்தால் தெளிவடைகின்றேன். சிவனின் திருவடியை சேர, அதற்குரிய பட்சாட்சரமான ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுகின்றேன். சக்கரத்தையும், சிவமந்திரத்தையும் சொல்கின்றேன். அந்த மந்திரத்தின் எழுத்தாகிய சிகரத்தைச் சிந்திக்கின்றேன்.

பாடல்:-

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயிராய் நிற்கும்
ஓசை அதன்மணல் போல விடுவதோர்

ஓசையாம் ஈசன் உணர வல்லார்க்கே.

விளக்கம்:-

மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து, சிவபெருமானை உணருங்கள். அப்படி உணர்பவர்களுக்கு, அவர்களுக்குள் இருந்து ஓசை ஒன்று வெளிப்படும். அது பூவில் இருந்து வெளிப்படும் நறுமணம் போலவும், ஈசனின் சொரூபமாகவும், தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் பாச உணர்வாகவும், அந்த பாசத்தின் கருணையால் உயிருக்குள் உயிராகவும் கலந்து நிற்கும்.

பாடல்:-

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே.

பொருள்:-

பல கோடி ஆண்டுகள், தியானத்தின் வழியாக இந்த உடலோடு வாழ்ந்தேன். பகல் எது, இரவு எது என்று அறியாத வகையில் தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். தேவர்கள் அனைவரும் வழிபட்டு பேறுபெறும் திருவடியை நானும் வணங்கி துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியம்பெருமான் திருவடியே துணை என்று அதனை இறுகப்பிடித்தபடி, பற்று இன்றி இருந்தேன்.

பாடல்:-

தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்

ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.

விளக்கம்:-

கோவில் கருவறையின் மேல் பருப்பொருளாக விளங்கும் விமானம், சிவவடிவம் ஆகும். சதாசிவ வடிவம் என்பது கருவறையில் சூட்சுமப் பொருளாக இருப்பதாகும். பரந்த பலிபீடம் சிவலிங்கமாம். இப்படி கோவிலின் ஒவ்வொரு பகுதியும் சிவமே ஆகும்.

பாடல்:-

கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு
நாடி அடிவைத்து அருள் ஞான சக்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவனாங் குறிக் கொண்டே.

விளக்கம்:-

உயிர், அதன் நல்வினை மற்றும் தீவினைக்கேற்ப உடலைப் பெறுகின்றது. உடம்பு, அதனால் பெறப்பட்ட பொருள், உடலின் உள்ளே அமைந்த உயிர் ஆகியவற்றை, தன்னுடைய அன்பால் ஈர்த்து, தன்னுடைய திருவடியில் வைத்து அருள் ஞான சக்தியை வழங்குபவர், சிவபெருமான். எனவே நாம் அனைவரும் துன்பத்திற்கு காரணமான பற்றை அறவே நீக்கினால், அதுவரை மறைவாக அருள் செய்த ஈசன், பின் நேரடியாகவே அருள் செய்வார்.

பாடல்:-

மேலும் முகடு இல்லை; கீழும் வடிம்பு இல்லை;
காலும் இரண்டு; முகட்டு அலகு ஒன்றுஉண்டு;
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

விளக்கம்:-

வீட்டைப் போல விளங்கும் இந்த உடம்புக்கு, தலைக்கு மேல் முகடு ஒன்றும் இல்லை. தலைக்குக் கீழே விளிம்பும் இல்லை. இரண்டு கால்கள் இருக்க, உடம்பை இறுக்கிக் கட்டத் தவறி விட்டனர். ஓலை கொண்டு வீட்டை மேய்ந்தவர், இடையை கட்ட மறந்துபோயினர். படைப்பவனின் பணியால் உருவான வெறும் கோவில் போன்றது இந்த உடம்பு. இதனை உணர்ந்து நல் உணர்வு பெற வேண்டும்.

பாடல்:-

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோன்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நற்காரணி தானே.

விளக்கம்:-

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவளாக அன்னை ஆதிபராசக்தி இருக்கிறாள்.

அந்த சக்தியின் அருளால், அயன் என்னும் பிரம்மன், அரி என்னும் திருமால், அரன் என்னும் சிவன் என பல தெய்வங்கள் தோன்றி, வெவ்வேறு (படைத்தல், காத்தல், அழித்தல்) பணிகளைச் செய்வர்.

பொன்னில் இருந்து பல அணிகலன்கள் உருவாவது போல, அந்த சக்தி, தன்னுடைய ஆருயிரில் இருந்து பலவற்றைத் தெய்வமாக்குவாள். மூவருக்கும் அவளே முதன்மையானவள் ஆவாள்.
Tags:    

Similar News