முக்கிய விரதங்கள்

வைகாசி மாதத்தில் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டிய விரத வழிபாடுகள்...

Published On 2023-05-24 05:46 GMT   |   Update On 2023-05-24 05:46 GMT
  • வைகாசியில் குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
  • வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்.

வளம் தரும் வைகாசி மாதத்தை "மாதவ மாதம்' என்பர். மாதங்களுக்குள் உயர்ந்த புனித மாதம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனை வைகாசம் என்றும் வடநாட்டில் வைசாக எனவும் குறிப்பர், வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் வடமொழியில் வைசாகம் ஆனது.

இம்மாதத்தில் புனித நதியில் நீராடி திருமாலை வழிபட்டு துளசியால் பூசை செய்தால் நற்பேறுகள் பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வைகாசியில் குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

முருகப்பெருமான், நரனும் சிங்கமும் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, புத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தர் மற்றும், பாப புண்ணிய கணக்கிட்டு மனிதனின் வாழ்நாளை முடிவு செய்யும் எமதர்மன் ஆகியோர் வைகாசி மாதத்தில் தான் அவதாரம் செய்தனர். வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. எமதர்மராஜன் தொடர்புடைய ஸ்ரீ வாஞ்சியம், திருச்சி அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். மே 24-ந் தேதி திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குருபூஜையாகும். 25-ந் தேதி சேக்கிழார் குருபூஜை அவரது ஊரான குன்றத்தூரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும்

ஆதிசங்கரர் வைகாசி பஞ்சமியிலும்,காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பவுர்ணமியேயாகும். சிவபெருமான் உலகைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டது வைகாசி வளர்பிறை துவாதசியில் தான், எனவே வைகாசி பிரதோஷங்கள் சிறப்பு வேண்டி வழிபட வேண்டிய நாட்களாகும். வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.

வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம்"ரிஷப விரதம்" ஆகும். வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும். இந்த விரதம் கடைப்பிடித்தால் வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. இந்த விரதத்தினால் வாகனயோகம் அடையலாம்.புதிய வாகனம் வாங்குவோர் அல்லது பதிவு செய்வோர்க்கு நற்பலன் உண்டு ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது. அன்று சிவனுக்கு பழங்கள் நிவேதித்து பகற்பொழுதில் விரதமிருந்து பிரதோஷ வேளையில் தரிசனம் செய்து முழு இரவு தொடங்கியதும் உணவு உண்ண வேண்டும். வைகாசி வளர்பிறை அஷ்டமி மே 27-ந் தேதி சம்பவிக்கிறது.

வைகாசி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை அணிவித்து, 108 பத்ம ராகக் கற்களாலான மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பத்மராகக் கல் மாலைக்கு பதிலாக முழு மல்லிகை மாலை அணிவித்தும் வழிபாடு நடத்தலாம்

வைகாசியில் வைகுந்தனை நினைத்து வழிபட சுகபோக வாழ்க்கை கிட்டும், வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலா தனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். வைகாசியில் புனித தீர்த்தங்களில் நீராடி திருமாலை துளசியால் வழிபட நற்பேறுகள் கிடைக்கும்.நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசியாகும்.இம்மாதத்தில் இறைவனை வழிபாடு செய்ய ஆயுள் விருத்தி , செல்வம் பெருகல் புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும்

கவுதமபுத்தர் அவதரித்ததும் கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றததும், மோட்சம் அடைந்ததும் வைகாசி பவுர்ணமியில் என்பதால் வைகாசி பவுர்ணமியை பவுத்தர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில்கொண்டாடுகின்றனர்.

புன்னாக கவுரி விரதம் என்பது மன சஞ்சலங்கள் நீங்கி நலமுடன் வாழ பெண்கள் கொண்டாடும் நாளாகும் புன்னாக மரத்தடியில் கவுரியை எழுந்தருள்வித்து வழிபாடு செய்து சர்க்கரைப் பொங்கல் படைக்கும் விரதம் மே 20-ந் தேதியும், கதலி கவுரி விரதம் சுக்கிர கிரக தோஷத்தால் தள்ளிப்போகும் திருமணம் மக்கட் பேறு ஆகியவை கை கூட மே 23-ந் தேதி மேற் கொள்ளலாம். வாழை மரத்தடியிலோ அல்லது பூசை அறையிலோ வாழைக் கன்றுகளிடையே கவுரிபடத்தை வைத்து 18 அல்லது 108 வாழைப்பழங்கள் படைத்து குழந்தைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் கொடுக்க பலன் உண்டாகும்.

ரம்பா திருதியை மே 22-ந் தேதி வருகிறது சாபத்தால் அழகும் கவுரவமும் இழந்த ரம்பை இந்திரனிடம் பரிகாரம் கூற கேட்க 'பூலோகத்தில், பார்வதிதேவி கவுரியாக அவதரித்து மகிழமரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கும் தேவியை விரதமிருந்து வழிபட்டால், அருள் கிடைக்கும் என கூறினார்.பூலோகத்தில் ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது. வைகாசி மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாகனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, காட்சி தந்து மீண்டும் தேவலோக முதல் அழகியாக அருள் புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர அருளினாள். அவள் மேற்கொண்ட இந்த விரதம் "ரம்பா திருதியை" என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் சகல் சவுபாக்கியமும் அதிகரிக்குமென்றும் அருளினாள்.

பாபஹர தசமி அல்லது தசஹர தசமி இவ்வாண்டு மே 30-ந் தேதி வருகிறது. வைகாசி அமாவாசைக்குப் பின் வரும் சுக்லபட்ச தசமி திதி அந்நாள் பத்து வித பாவங்களைப் போக்கக் கூடியதாகும். ஸ்ரீ ராமர் ராவணனைக் கொன்ற பாவத்தை நீக்கிக் கொள்ள, சேதுக்கரை ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி எனும் மணல் லிங்கம் பிரதிஷ்டை செய்து இந்நாளில் வழிபட்டார் என "ஸ்ரீ காந்தம்" என்ற நூல் குறிப்பிடுகிறது. அன்று அவரவர் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள புனித நதியிலோ, குளத்திலோ நீராடலாம். நதியிலும் குளத்திலும் நீரில்லாது போனாலும், சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து இனிமேல் பாவங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வீட்டில் துளசி, வில்வ இலைகள் சேர்ந்த நீரில் வடக்குதிசை நோக்கிக் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது. அன்று அன்னதானம் செய்வது ஏழை எளியவர்களுக்கு ஆடைகள் தானம் செய்வதும் பாபங்கள் சேர்ந்து புனிதம் சேர வழிவகுக்கும்.

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய ஒரு நட்சத்திரமாகும். இந்நாள் சோதி நாள் எனப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்க சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். முருகபக்தர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் அவதரித்தார். அன்று ஆழ்வார் திருநகரியில் நவகருட சேவை நடைபெறும். நமது பாவங்கள் நீங்கி நமக்கு நலன் பிறக்கத்துவங்கும் மாதம் வைகாசி. இறை வழிபாடு நமக்கு மகிழ்ச்சியை நல்கத் துவங்கும், கால சுழற்சியும் கடும் கோடையில் இருந்து அடுத்த பருவத்துக்கு நகரத்துவங்கி வளம் சேர்க்கத் துவங்கும் மாதமாகும்.

Tags:    

Similar News