முக்கிய விரதங்கள்

சியாமளா தேவி நவராத்திரி விரதம் இன்று தொடங்குகிறது

Published On 2023-01-22 05:02 GMT   |   Update On 2023-01-22 05:02 GMT
  • நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.
  • சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை.

ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.

இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியாமளா தேவி நவராத்திரி விரதம் தொடங்குகிறது.

சியாமளா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராஜசியாமளா தேவியின் மந்திரங்களை குருமுகமாக உபதேசம் செய்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகம் என்னும் புத்தகத்தில் சியாமளா தேவி மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் ஆர்வமுள்ளவளாக, எட்டுக் கைகளுடன், மரகதப் பச்சை நிறமுள்ளவளாக, மார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக நெற்றியில் சந்திர கலையை அணிந்து கொண்டவளாக, கைகளில் கரும்பு வில், மலர் அம்பு, பாசம், அங்குசம் ஆகிய வற்றை தரித்தவளாக கரங்களில் கிளியுடன் தியானம் செய்வதாக வர்ணிக்கப்பட்டுள்ளாள்.

ராஜ சியாமளா, மாதங்கி, மந்திரிணீ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இவள் மதங்க முனிவரின் மகளாக அவதரித்தவள். தசமகாவித்யைகளுள் ஒன்பதாவது வித்தையாக அறியப்படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியான சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஆகவே மந்திரிணி என்று அழைக்கப்படுகிறாள்.

லலிதா தேவி பண்டாசூரனுடன் போருக்கு புறப்பட்ட போது லலிதா தேவியின் கையில் உள்ள மனஸ் தத்துவமான கரும்பில் இருந்து தோன்றியவளே சியாமளா தேவி, லலிதா பரமேஸ்வரியின் மகாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருள் புரியும் இவள் லலிதா தேவிக்கு சக்தியை தந்தவள், லலிதா தேவியின் அக்சர சக்தியாக விளங்குபவள், சரஸ்வதியை போன்றே அருளுபவள்.

என்றாலும் கூட வெளியில் உள்ள கலைகளுக்கும் திறமைகளுக்கும் அதிபதி சரஸ்வதி, சியாமளா தேவியோ தகரா காசத்தில் உள்ள கலைகளுக்கு அதிபதி, அம்பிகையின் பிரதிநிதியாக, ஆட்சி நடத்துபவள்.

மேலும் கதம்பவனவாசினி என்றும் இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். அதாவது ஸ்ரீ லலிதா தேவியின் நிவாச தலமான ஸ்ரீநகரத்தில் சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்கிறாள் சியாமளா தேவி. மதுரை மாநகருக்கு கதம்பவனம் என்ற ஒரு பெயரும் உண்டு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள்.

பண்டாசூர வதத்தின்போது, கேயசக்ரம் என்னும் தேரில் இருந்து கொண்டு லலிதா தேவிக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசூரனின் தம்பியான விஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள்.

வீணையைக் கையில் தாங்கிக் கொண்டு காட்சி தரும் சியாமளா தேவி சங்கீதக் கலைக்கு தலைவி ஆவாள். சங்கீதம் கற்றுக் கொள்பவர்களுக்கும் சங்கீதத்தை உபாசிப்பவர்களுக்கும் குறிப்பாக வீணை வாசிப்பவர்களுக்கும் விசேஷமாக அருள் புரிபவள் சியாமளா. ஆகவே இன்று முதல் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சங்கீத இசை பாடுவதாலும் சங்கீதத்தை கேட்பதாலும் சங்கீதத்தில் ஈடுபட்ட இசை வல்லுனர்களை தேவியாக பாவித்து தாம்பூலம் தந்து மகிழ்விப்பதாலும் சியாமளா தேவியின் பூரண அருள் கிடைக்கும்.

Tags:    

Similar News