முக்கிய விரதங்கள்

குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ விரதமும்... தீரும் பிரச்சனைகளும்...

Published On 2023-01-19 03:55 GMT   |   Update On 2023-01-19 03:55 GMT
  • குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
  • தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது.

நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.

நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (19/1/23) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.

வியாழக்கிழமை (இன்று) நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

Tags:    

Similar News