முக்கிய விரதங்கள்

இன்று பிரதோஷம்... கிருத்திகை... விரதம் இருக்க சிறந்த நாள்...

Published On 2023-06-15 06:37 GMT   |   Update On 2023-06-15 06:37 GMT
  • முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
  • சிவபெருமானைப் போற்றி வழிபடும் சிவபுராணத்தைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும்.

இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம், முருகக் கடவுளுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் இரண்டும் இணைந்த நாளாக இந்த நாள் விளங்குகிறது.

வியாழக்கிழமையை குருவாரம் என்று சொல்வார்கள். வியாழ பகவான் தேவர்களின் குரு. எனவே, வியாழனுக்கு உரிய இந்த நாளில் குருவை வணங்குவதன் மூலமும் மகான்களை வழிபடுவதன் மூலமும் பல்வேறு நன்மைகளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. குருவே நம் பிழைகளை மன்னித்து அருள் செய்பவர். அதனால்தான் அருணகிரிநாதர், `குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்று பாடினார்.

வியாழன் தேவ குரு என்றால் தட்சிணாமூர்த்தி லோககுரு. இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் குருவாக விளங்குபவர். ஞானம் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி. சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது மேலும் ஒரு விசேஷம். கார்த்திகை முருகப் பெருமானின் நட்சத்திரம். முருகனும் சிவபெருமானும் வேறுவேறல்ல. சிவபெருமானின் அக்னி வடிவமே முருகக் கடவுள். முருகக் கடவுள் தேவர்களின் துயர்தீர்க்க அவதரித்தவர். கருணையே வடிவான வேலினைக் கையிலே கொண்டவர். அதோடு தகப்பன் சாமியாக சுவாமிமலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர். எனவே, வியாழன் அன்று முருகப்பெருமானை சுவாமிநாத ரூபத்தில் வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது.

இன்று விரதம் இருந்து சிவபெருமானையும் முருகப் பெருமானையும் கட்டாயம் வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவபெருமானைப் போற்றி வழிபடும் சிவபுராணத்தைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். ஐந்தெழுத்து மற்றும் ஆறெழுத்து மந்திரத்தை ஜபம் செய்யலாம். மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி வீட்டிலிருக்கும் சிவன் அல்லது முருகனின் படத்துக்குக் கிடைக்கும் மலர்களை சாத்தி வழிபடலாம். நோய்கள் தீரவும் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் இன்று மாலை பிரதோஷ வேளையில் முருகப் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள்.

Tags:    

Similar News