முக்கிய விரதங்கள்

திருமண பாக்கியம் அருளும் ஆடிப்பூர விரதம்

Update: 2022-08-01 01:42 GMT
  • உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம்.
  • ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும்.

அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது ஸ்ரீஆண்டாள் பிறந்தாள். பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் களத்திரக்காரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர்.

ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். அத்துடன் சுக்கிரன் இன்பம், அன்பு, பாசம், காதல் சுக, போகம், அழகு, ஆடம்பர வாழ்க்கை என அனைத்து லவுகீக இன்பங்களையும் வழங்குபவர்.

இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் என்பதால் ஒருவர் ஜாதக கட்டத்தில் சுக்ரன் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் வலுவிழந்தால் அல்லது பாவிகள் தொடர்பு இருந்தால் திருமணம் தடைபடும். சுக போகங்கள் குறைவுபடும். அழகு மங்கும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை இருக்காது. பொருள் வரவில் தடை, தாமதம் இருக்கும்.

ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்துர் செல்ல முடியாத இளம் கன்னிப் பெண்கள் வீட்டில் ஆண்டாள் படம் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினால் திருமணத் தடை அகலும். மனம் விரும்பிய மணாளனை அடையலாம்.

அன்று அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News