முக்கிய விரதங்கள்
ராமர் சீதா

சீதா தேவியின் விரதம் எதற்காக?

Published On 2022-04-25 05:54 GMT   |   Update On 2022-04-25 05:54 GMT
திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான, ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால், இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
'நான் என்னுடைய கணவருடன்தான் இருப்பேன். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்து ஒன்றாக வாழ்வோம், அந்நியோன்யமாக இருப்போம்' என்று  ஒரு பெண் உறுதி மேற்கொள்ளவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சீதா ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்த நாள், வைஷாகா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் போது நவமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான, ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால், இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணம் தள்ளிப்போகும் கன்னிப்பெண்களும் இவ்விரதத்தை மேற்கொண்டால், ராமபிரானைப் போல அழகும் பண்பும் நிறைந்த கணவன் கிடைப்பான்.

பூஜை செய்யும் முறை :

விடியற்காலையில் எழுந்து, குளித்து  முடித்ததும் பூஜையறையை சுத்தம் செய்யவேண்டும்.ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் சேர்ந்து இருக்கும் படத்துக்கு சந்தனம், குங்குமம்  வைத்து, மலர்கள் சூட்டி ஒரு சிறிய பலகை மீது வைக்க வேண்டும்.விளக்கை ஏற்றி, சீதா சஹஸ்ரநாமத்தை கூறி மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அன்னைக்குப் பிரசாதமாக பழம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபடலாம்.பின்பு சீதா தேவியின் வாழ்க்கைக் கதையை பக்தியோடு படிக்க அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

விரதம் இருக்கும் காலங்களில் திட உணவுகளைத் தவிர்த்து பழம்,பால், மோர், தண்ணீர் , இளநீர் போன்ற திரவஉணவுகளையே எடுத்துக்கொள்ளவேண்டும். அன்று அருகில் இருக்கும் ராமர் ஆலயத்திற்குச் சென்று ராமபெருமானையும், சீதா தேவியையும் தரிசித்து மகா அபிஷேகம், ஆரத்தி ஆகியவற்றைக் காணலாம். வீட்டில் ராமாயணம் படிக்க இயலாதவர்கள், கோயில்களில் நடக்கும் கதாகாலட்சேபத்தை கேட்கலாம்.

சீதா தேவி விரத பலன்கள் :

வம்புப் பேச்சுக்களை குறைத்து அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, தாய்மை உணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னை அருள்வாள். அதோடு கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன், சீரும் சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அருள்புரிவாள்.
Tags:    

Similar News