முக்கிய விரதங்கள்
வழிபாடு

தை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரத வழிபாடுகள்

Published On 2022-01-19 01:17 GMT   |   Update On 2022-01-19 01:17 GMT
சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு வாய்ந்த விரத வழிபாட்டு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
சூரியனின் தேர்ப் பாதை வட திசை நோக்கி திரும்பும் காலமே, ‘உத்திராயன புண்ணிய காலம்’ ஆகும். இது தை முதல் நாளில் தொடங்குகிறது. சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

தை கிருத்திகை

கார்த்திகை நட்சத்திரத்தை `கிருத்திகை’ என்றும் சொல்வார்கள். வருடத்திற்கு மூன்று கிருத்திகை நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெறும். அது தை மாதத்தில் வரும் ‘தை கிருத்திகை’, கார்த்திகை மாதத்தில் வரும் ‘பெரிய கிருத்திகை’, ஆடி மாதத்தில் வரும் ‘ஆடிக் கிருத்திகை’ ஆகும். தை மாதத்தில் வரும் காா்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் அன்று, விரதம் இருந்து கந்தவேலை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம்

தை மாதத்தில் வரும் பவுர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தை ‘தைப்பூசம்’ என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவபெருமான், நடராஜராக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் `தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது. அதே போல் பார்வதிதேவி, முருகப் பெருமானுக்கு சக்திவேலை வழங்கிய நாளும் தைப்பூசம் என்கிறார்கள்.

தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகிறார். எனவே, பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் பெருகும்.

தை அமாவாசை

மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்ளும் முக்கியமான தினங்களில், தை அமாவாசையும் ஒன்று. அமாவாசை தினங்களில் ‘ஆடி அமாவாசை’, ‘மகாளய அமாவாசை’, ‘தை அமாவாசை’ ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. தை அமாவாசை அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் முன்னோர் வழிபாடு செய்வார்கள். இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

ரத சப்தமி

தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி ‘ரத சப்தமி’ அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி நீங்கும்.

பீஷ்மாஷ்டமி

ரதசப்தமிக்கு அடுத்த நாள், அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை ‘பீஷ்மாஷ்டமி’ என்பர். 58 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், வைகுண்ட பதவியை அடைந்த தினம் அது. வேதம் படித்த வித்யார்த்திகள் அனைவரும் மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தைக் கொடுக்கும். தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு கிடைக்கும்.
Tags:    

Similar News