முக்கிய விரதங்கள்
பெருமாள்

திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம்

Published On 2022-01-04 11:21 IST   |   Update On 2022-01-04 11:21:00 IST
மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். திருவோண விரதத்தை தீவிர வைணவர்கள் ஒவ்வொரு மாதமும் பின்பற்றி வருகின்றனர். திருவோண விரதம் என்றால் என்ன எப்படி வந்தது என இங்கு காண்போம்.

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான். அதனால் தான் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் வரும் திருவோண நடத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

பங்குனி மாத திருவோண நடசத்திரத்தில் மார்கண்டேய மகரிஷியின் மகளான பூமி தேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு சென்றார். ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான் தேவியை ஒப்பிலியப்பன் பெருமான் மணந்து கொண்டார். இதனால் ஒப்பலியப்பன் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினமும் விழா கோலமாக இருக்கும்.

திருவோண விரதம் எப்படி மேற்கொள்வது?

திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.

மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும். இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என பெரியோர் கூறுகின்றனர்.

விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாலை வேளையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாலின் அருளைப்பெறுங்கள்.

Similar News