முக்கிய விரதங்கள்
ஐயப்பன் பூஜை

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய விரத பூஜை

Published On 2021-12-01 01:37 GMT   |   Update On 2021-12-01 01:37 GMT
சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும்.
ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும்.

சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும்.

மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.

கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலர் விறகுகளை ஆழியில் போட வேண்டும்.

ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜை நடத்தலாம்.

விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே ஐயப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

கற்பூர தீபம் ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.
Tags:    

Similar News