ஆன்மிகம்
விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விரதம்

Published On 2019-08-31 07:40 GMT   |   Update On 2019-08-31 07:40 GMT
விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும். வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.

பூசை அறையைக் கழுவி, மெழுகி, கோலம்போட்டு, அதன் மையப் பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும். அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு ‘ஓம்’என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும். அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருளாய் வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும். அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.
Tags:    

Similar News