ஆன்மிகம்
ஆவணி அவிட்டம்- விரத முறை

ஆவணி அவிட்டம்- விரத முறை

Published On 2019-08-15 04:00 GMT   |   Update On 2019-08-15 04:00 GMT
ஆவணி அவிட்டம் அன்று விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டு காயத்ரி மந்திரம் சொல்பவர்களை, எந்தவித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.
ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று, பூணூல் அணிபவர்களால் கொண்டாடப்படும் நிகழ்வு, ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வார்கள். இதை குருவின் மூலமாகத்தான் செய்ய வேண்டும். வீட்டில் குருக்களை வைத்து காயத்ரி மந்திரம் சொல்லி, பின் பூணூல் போடுவார்கள்.

‘ஆவணி அவிட்டம்’ என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் ‘உபாகர்மா.’ இதற்கு ‘ஆரம்பம்’ என்று அர்த்தம். சிரவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிடைத்தது. அதாவது வேத உபதேசம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நட்சத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயர் வந்தது. பிரம்மனுக்கு வேதம் கிடைத்த ஆரம்ப நாள் என்பதால், இது ஆண்டுதோறும் மனிதர்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் செய்யப்படும் இது, வேதத்திற்கு செய்யும் மரியாதையாகவே கருதப்படுகிறது. இதை ஒரு வகையில் ‘வேதத்திற்கான ஆண்டு விழா’ என்றும் சொல்லலாம்.

பிரம்மனுக்கு வேதம் உபதேசமாகிய தினம். அதில் இருந்து வழிவழியாக மனிதர்களுக்கு வேதம் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் ‘உபநயனம்’ எனும் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும்.

‘உப நயனம்’ என்ற இரண்டு சொற்களின் அர்த்தம், ‘காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொள்வதற்கு குருவின் அருகில் அழைத்துச் செல்லுதல்’ என்று பொருள்.

பூணூல் அணிபவர்கள் தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். பூணூல் அணிந்தவர்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை குறைந்தது 144 முறை, காலை, நண்பகல், மாலையில் ஜபித்து வரவேண்டியது கடமை.

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் “ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்” என்பதாகும். இந்த மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி, 108 அல்லது 1008 முறை ஜெபிக்க பாவங்கள் விலகும்.

காயத்ரி மந்திரம் ஜபித்தால் துன்பம், எதிரி பயம் நீங்கும். முகத்திலும், உடலிலும் ஒருவித ஒளி உண்டாகும். பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் (எள்ளும், நீரும் கலந்து தாரையாக விடுவது) என்னும் சடங்கைச் செய்கின்றனர்.

விரத முறை

கணபதி பூஜையுடன் இந்த விரதத்தை தொடங்கி, சாஸ்திர ரீதியாக சம்பந்தப்பட்ட இடத்தை சுத்தம் செய்த பின்னர், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம் ஆகியவற்றை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி, 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். பின்னர் நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்ட வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும். அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் பஞ்சபூதங்களையும் வழிபடலாம்.

திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசீர்வாதம் பெற வேண்டும். பூணூல் அணிந்து வரும் ஆண்களை, பெண்கள் வாசலில் மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். அது தோஷம் என்பதால் அந்த மாதத்தில் உபநயனம், திருமணம் போன்ற சடங்குகள் செய்யமாட்டார்கள். அதனால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே வந்து விடுகிறது.

இவ்விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டு காயத்ரி மந்திரம் சொல்பவர்களை, எந்தவித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.

பொ.பாலாஜி கணேஷ்
Tags:    

Similar News