ஆன்மிகம்

ஞான கெளரியை விரதம் இருந்து வழிபடுவோம்

Published On 2019-05-13 02:19 GMT   |   Update On 2019-05-13 02:19 GMT
வீட்டில் ஸ்ரீகெளரி தேவியை விரதம் இருநது வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும்.
கெளரி என்ற திருநாமம் அம்பாளைக் குறிப்பது. கிரிகுலங் களின் அரசியான தேவியை கெளரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீகெளரி தேவியை விரதம் இருந்து வழிபடுவது, உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். வீட்டில் ஸ்ரீகெளரி தேவியை விரதம் இருநது வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னிப் பெண்கள் கெளரி தேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான்.

கெளரி தேவியை சோடச கெளரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள்.

ஞான கெளரி, அமிர்த கெளரி, சுமித்ர கெளரி, சம்பத் கெளரி, யோக கெளரி, வஜ்ர ச்ருங்கல கெளரி, த்ரைலோக்ய மோஹன கெளரி, சுயம்வர கெளரி, கஜ கெளரி, கீர்த்தி கெளரி, சத்யவீர கெளரி, வரதான கெளரி, ஐஸ்வர்ய மகா கெளரி, சாம்ராஜ்ய மகா கெளரி, அசோக கெளரி, விஸ்வபுஜா மகா கெளரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன. இந்த தேவியரில் ஸ்ரீஞான கெளரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால், தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றிபெறும். அன்னை பராசக்தி தேவியானவள் ஞான சக்தியாக கோலம்கொண்ட சரிதத்தை சிவபராக்கிரமம் விவரிக்கிறது.

ஒருமுறை தன்னுடைய சிறப்பைக் குறித்து சிவபெருமானிடத்தில் மிகைபட விவரித்தாள் தேவி. இறைவன் உயிர்களைப் படைத்து அந்த உயிர்களுக்கு உடல், அறிவு ஆகியவற்றை அளித்தாலும், தானே அவற்றுக்கு சக்தியைத் தருவதாகவும் ஆகவே, தனது செயலே உயர்ந்தது என்றும் பேசினாள். பரமன் ஒருகணம் உலக உயிர்கள் அனைத்தின் அறிவையும் நீக்கினார். அறிவு நீங்கியதால் உலகில் குழப்பமும் சச்சரவும் ஏற்பட்டன. அதைக் கண்டு தேவி திகைத்தாள். தன்னால் வழங்கப்பட்ட சக்தி அனைத்தும் வீணாவதை உணர்ந்தாள்.

தனது தவறான எண்ணம் குறித்து வருந்தினாள். இறைவன், உயிர்களுக்கு மீண்டும் ஞானம் வழங்கினார். தேவிக்கும் அருள் புரிந்தார். இங்ஙனம் தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவ மூர்த்தியை கெளரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதைத் தொடர்ந்து அம்பிகை வன்னி மரத்தடியில் அமர்ந்து சிவனருள் வேண்டி தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த சிவனார், தன்னுடலில் பாதி பாகத்தை அவளுக்கு அளித்ததுடன், அவளை அறிவின் அரசியாக்கினார். இதையொட்டி தேவி, ஞான கெளரியாகச் சிறப்பிக்கப்படுகிறாள்.

இந்த தேவியை பிரம்ம தேவன் கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமியில் வழிபட்டு அருள்பெற்றாராம். அந்த நாளை ஞான பஞ்சமி, கெளரி பஞ்சமி என்று போற்றுவார்கள். வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர்பிறை பிரதமையில் விரதம் இருந்து வழிபடுவார்கள். நாமும் வரும் புண்ணிய புரட்டாசியில் இந்த அம்பிகையை விரதம் இருந்து வழிபட்டு, அளவில்லா ஞானமும் செல்வமும் பெற்று மகிழ்வோம்.

நவகிரக நாயகியாகத் திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல், சந்திர மண்டலத்தில் அமிர்த கெளரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கெளரியாகவும், புத மண்டலத்தில் ஸ்வர்ண கெளரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கெளரி யாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கெளரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசுவர கெளரியாகவும் திகழ்கிறாளாம்.

அவ்வகையில் குரு மண்டலத்தில் அன்னை ஞான கெளரியாக அருள்பாலிக்கிறாள். ஆகவே, இந்தத் தேவியை அனுதினமும் விரதம் இருந்து வழிபட்டு வந்தால், ஞானத்தையும், திருமணப் பேற்றையும், நல்வாழ்வையும் தருவாள்.
Tags:    

Similar News