ஆன்மிகம்

முக்தி தரும் சிவராத்திரி விரதம்

Published On 2018-02-06 06:30 GMT   |   Update On 2018-02-06 06:30 GMT
சிவராத்திரியன்று விரதம் இருந்தால் முக்தி கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவர் கிடைப்பார்கள். கோடி பாவங்கள் தீரும்.
ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு தூங்காமல் கேட்டுக் கொண்டு இருந்தது.

தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து சிவன் மேலும், பார்வதி மேலும் வீசிய படியே இருந்தது. சிவராத்திரியில் 4 காலங்களிலும் தூங்காமல் குரங்கு வீசிய வில்வ இலைகளை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அந்த குரங்கிற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறக்க சிவன் அருள் புரிந்தார்.

உடனே அந்த குரங்கு தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு முசுகுந்த மன்னனாக தான் வாழும் காலத்தில் குரங்கு முகத்துடன் பிறக்க வேண்டும் என வரம் கேட்டது. சிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளித்தார். அதன்படியே சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தியாக குரங்கு முகத்துடன் பிறந்து மூவுலகிலும் ஆட்சி செய்தார்.

சிவராத்திரியன்று விரதம் இருந்தால் முக்தி கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவர் கிடைப்பார்கள். அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். கோடி பாவங்கள் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். சிவராத்திரி விரதம் இருந்துதான் பிரம்மா, சரஸ்வதி தேவியை மனைவியாக பெற்றதுடன் உலக உயிர்களை படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதம் இருந்து சக்ராயுதம் பெற்றதுடன், மகாலட்சுமியையும் உயிர்களை காக்கும் உன்னத பதவியையும் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News