ஆன்மிகம்

ஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம்

Published On 2018-01-24 03:38 GMT   |   Update On 2018-01-24 03:38 GMT
சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம். இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
24-1-2018 ரத சப்தமி

உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாக கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வர். இவர் சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.

சூரிய சக்தியால் தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. கோடை, மழை, குளிர், உள்ளிட்ட பருவநிலைகள் சூரியனை சுற்றியே அமைகின்றன. சூரியனை கடவுளாக வழிபட்டு வரும் மதத்திற்கு ‘சவுமாரம்’ என்று பெயர்.

சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து கிரகபதம் எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் பெற்றார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும் வெப்பத்தை தரக்கூடிய வல்லமையை பெற்றார்.

காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால் பன்னிரு சூரியர்களையும் ஆதித்தர் என்பர்.

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.

அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் சமயமே மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக்கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விசு என்றும் ஐப்பசி மாதப் பிறப்பை ‘ஐப்பசி விசு’ என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப் படுகிறார். சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம் உண்டு. அந்த தேரை பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் இழுக்கின்றன. இந்தக்குதிரைகளை ஓட்டுகிற ரத சாரதி, அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தையும் குறிக்கும். சூரியசக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயனத்தை குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம் அஸ்தமனம், அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. அவரது பிறந்தநாளை ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் 7-வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். ரத சப்தமிஅன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகிறது. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட செல்வது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நீராடலாம். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தை கள் உள்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும். பெண்கள் உயர் நிலையை அடைவர்.

கணவரை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

அன்று சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை இரண்டையும் நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி ரொட்டி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.
Tags:    

Similar News