ஆன்மிகம்

செல்வம் அருளும் விரதம்

Published On 2018-01-23 08:48 GMT   |   Update On 2018-01-23 08:48 GMT
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். ஆடி மாதம் சுக்கில பட்சம் பவுர்ணமிக்குச் சமீபமான வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். ஆடி மாதம் சுக்கில பட்சம் பவுர்ணமிக்குச் சமீபமான வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த தினத்தில்தான் மாலை வேளையில் லட்சுமி பாற்கடலில் தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு அடைந்தார்.மகாலட்சுமி சகல பாக்கியங்களையும் கொடுக்கக்கூடியவள். ஐஸ்வரியத்திற்கு இவளே அதிபதியாகவும், அஷ்டலட்சுமியாகவும் விளங்குகிறாள்.

எட்டுவிதச் செல்வங்களை நல்கு வதுடன் தாலி பாக்கியத்தையும் வழங்குகின்றாள். அதனால்தான் திருமணமான பெண்கள் இத்தினத்தில் லட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்கின்றனர்.

காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை இயன்ற அளவு அலங்கரித்து கோலமிட்டு லட்சுமி கடாட்சமாகச் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகணம் செய்து எலுமிச்சம்பழம், புஷ்பங்கள் சாத்தி இனிப்பு பண்டங்களைப் படைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும், வீட்டின் நலனையும் தருவது நெய் விளக்காகும். எனவே அதை ஏற்றி வழிபட வேண்டும்.

மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களைப் பாடித் தியானிக்கலாம். மங்களகரமான மஞ்சள் கயிற்றை ஒன்பது முடிச்சுக்களுடன் பூஜையில் வைத்து வழிபாடு செய்து முடிந்தபின் அதனை எடுத்து வலது மணிக்கட்டில் விரதம் மேற்கொள்ளுபவர் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினரும் கூடி மகிழ்வுடன் இனிப்புகளையும், பிரசாதங்களையும் பயன்படுத்தலாம். விரத தினம் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமலும், லட்சுமி துதி, தோத்திரம் ஆகியவற்றுடன் கூடிய சிந்தனையுடனுமே இருத்தல் வேண்டும்.

வரலட்சுமியின் நோன்பை அனுஷ்டித்த வர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது. கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இவ்விரதம் மிகவும் உகந்தது. அதோடு இது மனதிற்கு நிம்மதி தரும் விரதமாகும்..
Tags:    

Similar News