ஆன்மிகம்

சிவபெருமானுக்கு உகந்த முக்கியமான விரதங்கள்

Published On 2018-01-09 05:47 GMT   |   Update On 2018-01-09 05:47 GMT
சிவபெருமானுக்கு உகந்த சில விரதங்களை பற்றியும், இந்த விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இடப விரதம்

சிவபெருமானின் வடிவங்களில், இடபாரூடர் என்னும் காளை வாகனர் வடிவமும் ஒன்றாகும். சிவபெருமான் காளைக் கொடியும், காளை வாகனமும் கொண்டவர். சிவனும் சக்தியும் காளை வாகனத்தின் மேல் எழுந்தருளும் கோலத்தை இடபாரூடர் வடிவம் என்பர். ஈசனுக்குப் பல வடிவங்கள் இருந்தாலும், பெரும்பாலும் காளை வாகனராகவே திருக்காட்சி தந்து அருளுகின்றார். ஆகவே இந்த வடிவம் சிறப்புடையது. காளை வாகனரை வைகாசி மாத வளர்பிறையில் வரும் அஷ்டமியன்று விரதம் இருந்து வழிபட வேண்டும்.

கேதார கவுரி விரதம்

ஆணும், பெண்ணும் சமம் என்று ஈசன் வலியுறுத்திய அர்த்தனாரீஸ்வரரின் தோற்றம் உருவாக காரணமாக இருந்த விரதம் இது. கேதாரம் என்றால் வயல் என்று பொருள். இமயமலையிலுள்ள வயலில் ஈசுவரன் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார். ஆகையால், அவருக்கு கேதாரநாதர், கேதாரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. கவுரி என்பது பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.

ஐப்பசி மாத அமாவாசை நாளில் இந்த விரதம் வரும். அதற்கு முன் தொடங்கி, 21 நாள் வரையில் பூஜை செய்ய வேண்டும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் அந்த ஒரு தினத்தில் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம்.

மகா சிவராத்திரி விரதம்

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது, மகா சிவராத்திரி விரதம். இந்த விரதத்தை ஆண், பெண் வேறுபாடின்றி கடைப்பிடிக்கலாம். ஈசனை நினைத்து மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையான விரதம் இது.



அன்று காலையில் குளித்து சிவாலய வழிபாடு செய்து, பகல் முழுவதும் இறை நினைப்புடன் நமசிவாய மந்திரத்தை கூற வேண்டும். இரவில் நடைபெறும் நான்கு கால சிவ வழிபாட்டில் கலந்து கொள்வதோடு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓத வேண்டும். மறுநாள் காலையில் குளித்துவிட்டு சிவாலய தரிசனம் செய்து பின் சிவனடியார்களுடன் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்யலாம்.

உமா மகேஸ்வரர் விரதம்

சிவபெருமானின் வடிவங்களில், உமா மகேஸ்வர வடிவமும் ஒன்றாகும். மகேஸ்வரரின் அருள் சக்தியே உமாதேவி. ஞானமும், கருணையுமாக திகழும் உமாதேவி, மகேஸ்வரரைப் பார்த்துக் கொண்டிருக்கும் வடிவே ‘உமா மகேஸ்வர வடிவம்’ ஆகும். இவர்களைத் தியானித்து கார்த்திகை பவுர்ணமியில் விரதம்இருப்பது ‘உமா மகேஸ்வரர் விரதம்’ ஆகும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள், பகலில் ஒரு பொழுது உண்ணலாம். அல்லது இரவில் எளிய சிற்றுண்டியையோ, சில பழத்துண்டுகளையோ சாப்பிடலாம்.

திருவாதிரை விரதம்

தாருகா வனத்தில் இருந்த முனிவர்கள், ‘கர்மாதான் மனிதனுக்கு பலனைத் தருகிறது. எனவே தனியாக ஈஸ்வரன் ஒருவர் தேவையில்லை’ என்ற கருத்தில் இருந்தனர். அவர்களை பக்தி மார்க்கத்தில் செல்ல வைப்பதற்காக, சிவபெருமான் பிட்சாடனராக உருவம் கொண்டார். அவரது பேரழகைக் கண்ட ரிஷி பத்தினிகள், ஈசனின் மீது மயக்கம் கொண்டனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், சிவபெருமானை கொல்வதற்காக யாகத்தில் இருந்து வந்த யானையை அனுப்பினர். அதைக் கொன்று தோலை உடுத்திக்கொண்டார். 

பிறகு முயலகன் என்ற அரக்கனை அனுப்பினார்கள். அவனை தன்னுடைய காலில் போட்டு மிதித்தார். பிறகு உடுக்கை, மான், தீ, பாம்பு போன்றவற்றை ஏவினார்கள். அவற்றை ஆபரணங்களாகக் கொண்டு, நர்த்தனம் புரிந்தார் சிவபெருமான். அவர் நடனம் புரிந்த நாளே ஆருத்ரா தரிசனம். அது நிகழ்ந்தது ஒரு திருவாதிரை நட்சத்திரத்தில். எனவே அந்த நாளில் விரதம் இருந்து, காலையில் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News