ஆன்மிகம்

விநாயகர் விரதங்களும் - கிடைக்கும் பயன்களும்

Published On 2018-01-06 08:35 GMT   |   Update On 2018-01-06 08:35 GMT
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சங்கட ஹர சதுர்த்தி:

ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.

இது மாசிமாதம், தேய்பிறையில், செவ்வாய்க்கிழமையோடு கூடி வரும் சதுர்த்தி திதியில் விரதம் இருக்க துவங்கி ஓராண்டு வரை தேய்பிறை சதுர்த்தியில் நிறைவு செய்யும் ஒரு விரதமாகும். அதைத்தான் ஒரு வருடம் தொடர்ந்து விரதம் என்பதில்லாமல், ஒவ்வொரு தேய் பிறையில் வரும் சதுர்த்திக்கும் சங்கட ஹர சதுர்த்தி என்று விநாயகப் பெருமானை விதிப்படி பூஜிக்கிறோம். 

சஷ்டி விரதம்: 

கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் மார்கழி மாதத்து சுக்லபட்ச சஷ்டி முடிய 21 நாள்களும் விநாயகரை வழிபட அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தில் 21 இழைகளினால் ஆன காப்புக்கயிற்றினை கணவனும்-மனைவியும் வல இடக்கரங்களில் அணிந்து விரத நோன்பை மேற்கொள்வர். முடிவு நாட்களில் பலவிதமான உணவுகளைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விரதத்தை முடிப்பர். 

சித்தி விநாயக விரதம்:

புரட்டாசி, வளர்பிறை சதுர்த்தியில் விநாயக விரதம் அனுஷ்டிப்பது. இது பிரஹஸ்பதியால் கூறப்பட்டு தரும புத்திரர் அனுஷ்டித்த புகழ் மிக்க விரதமாகும். 

விநாயக நவராத்திரி விரதம்:

பங்குனி மாதம் திருவொற்றியூரில் ஸ்ரீ கணேசர் உற்சவம் என்றும் ஒரு விழா கணபதி பெயரில் நடக்கிறது. விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் 9 நாட்களில் விநாயக நவராத்திரி என்று சிலர் கொண்டாடுவார்கள். 

ஒரு வருட காலத்திற்கு விரதம் செய்வதால் இடையில் இறப்பு, தீட்டுக்காலம் வந்தால் 16 நாட்கள் நிறுத்தி விட்டு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று காக்கைக்கு காலையில் நெய் விட்டு வெறும் சாதத்தை போட்டு அது எடுத்த பின் விரத பூஜை செய்ய வேண்டும். திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம் என்றும் ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும். 

கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பூஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் பெரும் தொகை கூட படிப்படியாக அடைந்து விடும். 

தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையையும் சேர்த்து வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். இதற்கு ஸ்வர்ண கணபதி என்று பெயர். 

விநாயக விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை விடுதல் கூடாது. அப்படி விட நேர்ந்தால் 5 பேருக்கு அன்னதானம் இட்டு (6 மாதத்திற்குப் பிறகு) தொடர்ந்து செய்ய விரும்புகிற மற்ற ஆண்-பெண் ஏற்பளிப்பு ஒப்புதலோடு தாம்பூலத்தில் ஒரு ரவிக்கைத் துணி வைத்து கொடுத்து விடலாம்.

Tags:    

Similar News