ஆன்மிகம்

ஏகாதசி விரதத்தின் மகிமை

Published On 2017-12-29 13:48 IST   |   Update On 2017-12-29 13:48:00 IST
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.

ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிட்சமாக வாழ்ந்தார்கள்.

ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

ராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது. 

ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது. 

பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News