ஆன்மிகம்
தண்டு விரதத்தை நிறைவு செய்வதற்காக வாழைத்தண்டு மற்றும் பழங்களை பக்தர்கள் தயார் செய்யும் காட்சி.

கந்தசஷ்டி விழா: தண்டு விரதத்தை நிறைவு செய்த பக்தர்கள்

Published On 2017-10-26 03:50 GMT   |   Update On 2017-10-26 05:25 GMT
பழனி முருகன் கோவில் கந்தசஷ்டியையொட்டி சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தண்டு விரதத்தை நிறைவு செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். விரதங்களில் சஷ்டி விரதம் மிக உயர்ந்த விரதமாக கருதப்படுகிறது. சஷ்டி என்பது திதி விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை நாளில் தொடங்குகிறது.

சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சஷ்டி விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். கந்தசஷ்டி விரத நாட்களான 6 நாட்களும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகும்.

கந்தசஷ்டியையொட்டி முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் பூர்ண கும்பம் வைத்து விஷேச அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை நடைபெறும். பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருப்பர். 6-வது நாளில் வாழைத்தண்டு, உளுந்தம் பருப்பு, பழங்கள், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முருகனுக்கு படைப்பர்.

அதன்பின்னர், அவைகளை பக்தர்கள் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வர். இதற்கு தண்டு விரதம் நிறைவு செய்தல் என்பர். இதன் மூலம் 6 நாட்களாக கடும் விரதம் இருக்கும் உடல் இயல்பு நிலைக்கு திரும்பும். 7-ம் நாளன்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு பக்தர்கள் விரதத்தை முடிப்பர். இதையொட்டி பழனி திரு ஆவினன்குடி கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்டுவிரதத்தை நிறைவு செய்தனர்.
Tags:    

Similar News