ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

மேன்மை பொருந்திய மென்மை நன்மை தரும்

Update: 2021-08-03 02:59 GMT
‘எல்லா விஷயங்களிலும் மென்மையைக் கையாளுவதையே இறைவன் விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
மென்மையான போக்கு இறைவனின் உயர்வான பண்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு எதிரான போக்கு வன்மை. மென்மையை ஆதரிப்பவர் இறைநேசராக இருப்பார். வன்மையை ஆதரிப்பவர் ஷைத்தானின் உடன்பிறப்பாக உலா வருவார்.

மென்மையான போக்கு என்பது நமது பேச்சில் வெளிப்பட (குளிர) வேண்டும். நமது செயலில் மிளிர வேண்டும். நாம் எடுக்கும் முடிவில் ஒளிர வேண்டும். இவ்வாறு நமது அணுகுமுறையை அமைத்துக் கொண்டால் சர்வமும் நன்மை மயமாக ஆகிவிடும்.

“ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ஆயிஷாவே! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும், பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்’ என்று கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம்)

‘மென்மை எதில் இருந்தாலும் அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

‘எல்லா விஷயங்களிலும் மென்மையைக் கையாளுவதையே இறைவன் விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

பெற்றோர் குழந்தைகளிடமும், குழந்தைகள் பெற்றோர்களிடமும், பெரியவர் சிறியவரிடமும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

கணவன் மனைவியிடம், ஆசிரியர் மாணவ-மாணவிகளிடம் மென்மையை கையாள வேண்டும். மேலும் பொதுமக்களிடமும், அனைத்துவிதமான உயிரினங்களிடமும் மென்மையான அணுகுமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு அடுத்தபடியாக மென்மையான போக்கை ஆயுள்முழுவதும் கடைப்பிடித்த ஒரு மாமனிதர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

“இறைவனின் கிருபையின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப் போயிருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 3:159)

“இறைவன் புறத்திலிருந்து எவருக்கு மென்மையான போக்கிலிருந்து பங்கு கொடுக்கப்பட்டதோ, அவருக்கு இவ்வுலக, மறுவுலக நலவுகளில் இருந்து பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எவர் மென்மையான சுபாவத்தின் பங்கை இழந்து விட்டாரோ, அவர் இருவுலக நலவுகளையும் இழந்துவிட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: பஹவீ).

“எந்த வீட்டாருக்கு அல்லாஹ் மென்மையை வழங்குகிறானோ, அதன் மூலம் அவர்களுக்குப் பலன் அளிக்கிறான். எந்த வீட்டாருக்கு மென்மை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு கடினத்தன்மையின் மூலம் நஷ்டமடையச் செய்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: பைஹகீ)

மென்மை பரிபூரண இறைநம்பிக்கையின் ஆதாரமாகவும், அழகிய இஸ்லாமின் ஆதாரமாகவும் அமைகிறது. அது இறைநேசத்தையும், மக்களின் பாசத்தையும் பலனாகத் தரும். அது ஒருவரின் சீர்திருத்தத்தையும், அவரின் நற்குணத்தையும் பிரகடனப்படுத்தும். மென்மையின் முடிவு நற்குணமாகும். மென்மை மனிதனுக்கு நன்மையை அடைய வைக்கும் அற்புதமான செயலாகும். மென்மையே நன்மை, நன்மையே மென்மை.

அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News