ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

சமுதாய வாழ்வின் உயிர் - ‘ஜகாத்’

Published On 2021-05-18 07:06 GMT   |   Update On 2021-05-18 07:06 GMT
இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது.
மனித இனம் ஒருவர் மற்றொருவருடன் சார்ந்து இருக்கிறது. முதல் மனிதனுக்கே ஒரு துணை உடன் படைக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைக்கு பெற்றோர்கள் உதவி இல்லையேல் வாழ, வளர முடியாது.

இவ்வாறே குடும்பங்கள் இணைந்து சமூகம் உருவாகிறது. இத்தகைய நிலையில் குடும்ப, சமூகத்தின் பல தேவைகளும் ஏற்படுகின்றன. அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. நட்பு, அன்பு, தோழமை, மரியாதை, கண்ணியம், பாராட்டு என்று பல்வேறு வகையில் தேவைகள் உருவெடுக்கின்றது.

இத்தகைய தேவைகளில் ஒன்றுதான் பொருளாதார ஒத்துழைப்பு. சமுதாயத்தில் எல்லோரும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பணக்காரர்கள், ஏழைகள், வறியவர்கள், கடனாளிகள், இயலாதவர்கள், முதியோர், அனாதைகள் என பலதரப்பட்டவர்கள் இருப்பார்கள். சமுதாயத்தின் பரந்து விரிந்த இந்த தேவைகளை புறக்கணித்து உலகில் அமைதியாக வாழவும் முடியாது என்பது நிதர்சன உண்மை.

இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது. எனவே வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு செல்வந்தர்களின் செல்வத்திலிருந்து 2.5 சதவீதம் ஜகாத் - ஏழைகளின் பங்காக - வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது. இது உதவி அல்ல, மாறாக ‘ஏழைகளின் பங்கு’ என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்து ஏழைகளை கண்ணியப்படுத்துகிறது.

“அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது. யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்”. (திருக்குர்ஆன் 70:24)

‘ஜகாத்’ என்றால் ‘தூய்மை’, ‘வளர்ச்சி’ என்று பொருள். மனமும் தூய்மை அடைகிறது, பொருளும் வளர்ச்சி அடைகிறது.

ஜகாத்தின் உண்மையான நோக்கம் வறுமை நீக்கம் ஆகும். செல்வம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கிடையே சுழல்வதற்கு பதிலாக அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இது வட்டிக்கு நேர் எதிரான முறைமை ஆகும். வட்டி ஏழைகளிலிருந்து செல்வந்தர்களுக்கு செல்கிறது. ஆனால் ஜகாத், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றடைகிறது.

திருக்குர்ஆன் இதை இவ்வாறு பதிவுசெய்துள்ளது:

‘நம்பிக்கையாளனே! உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் அவர்களின் உரிமையையும் தந்துவிடு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர்’.

‘மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்’. (திருக்குர்ஆன் 30:38-39)

ஜகாத் ஒரு பொருள் வழி வணக்கம். இஸ்லாத்தின் தூண். இறை கட்டளை. மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை போன்று முக்கியம்.

ஜகாத்தின் பிரதான நோக்கம் வறுமை ஒழிப்பு ஆகும். ஒரு நபருக்கு இந்த வருடம் கொடுத்தால் அடுத்த வருடம் அவர் ஜகாத் வாங்க தகுதியில்லாத அளவுக்கு அவரை உயர்த்த வேண்டும். சில்லரை காசு கொடுப்பது ஜகாத்தின் நோக்கம் அல்ல. ஆகவே கூட்டு முறையில் ஜகாத் வசூலித்து, உரியவர்களை தேர்வு செய்து ஜகாத் கொடுத்து உயர்த்த வேண்டும். இதற்காக ஜகாத் வசூலிக்கும் நிறுவனங்களும், பணியாளர்களும், சமூக மக்களின் பொருளாதார நிலைபுள்ளி விவரங்களும் அவசியம் தேவைப்படுகிறது.

இந்த தான தர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:60)

நபிகள் நாயகம் எச்சரிக்கிறார்கள்: ‘ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத் பிரித்தெடுக்காவிட்டால் அது அசல் பொருளையே அழித்து விடும்’.

நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
Tags:    

Similar News