ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

இறையச்சமே மிகவும் சிறந்தது

Published On 2021-05-17 04:14 GMT   |   Update On 2021-05-17 04:14 GMT
‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல்லாஹ்’ - ‘இறைவனுடைய மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

இறைவனுடன் இணைத்து கூறப்படும் ஒவ்வொரு பெயருக்கும், பொருளுக்கும் ஒரு தனி மகத்துவம் உண்டு. சாதாரண ஒரு பொருள் இறைவனுடன் இணையும்போது, அதன் அந்தஸ்து உயர்ந்த இடத்தை அடைந்து விடுகிறது.

உதாரணமாக ‘ரசூல்’ என்றால் ‘தூதர்’ என்று பொருள். இதுவே ‘ரசூலுல்லாஹ்’ - ‘இறைவனின் தூதர்’ என்று வரும்போது மற்ற தூதர்களை விடவும் இறைத்தூதருக்கு தனிச்சிறப்பு உண்டு.

ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் இறைவனின் தன்மைகளான உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, விழித்திருப்பது, தனித்திருப்பது போன்ற உயர் இறைப்பண்புகள் இந்த மாதத்தில் பிரதிபலிக்கிறது.

‘ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்கே இருக்கிறது, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு உரியது, அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்; நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்றும், மற்றொரு அறிவிப்பில் ‘அதற்கு நானே கூலியாக இருப்பேன்’ என்றும் இறைவன் குறிப்பிட்டதை நபி (ஸல்) கூறினார்கள்’ என்று நபித்தோழர் அபூஹூரைரா (ரலி) அறிவித்துள்ளார்.

ரமலான் இறைவனின் மாதமாக இருப்பதினால்தான் மற்ற மாதங்களை விட ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்படுகிறது; மற்ற மாதங்களை விடவும் வணக்க வழிபாடுகளில் சிறந்ததாக அமைந்துள்ளது; இதன் நாட்களும், இரவுகளும், பகல்களும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நொடியும் மற்ற மாதங்களை விட உயர்வான இடத்தை எட்டிப் பிடிக்கிறது.

ரமலானில் நோன்பாளிகளின் ஒவ்வொரு மூச்சும் இறைவனின் தஸ்பீஹ் (துதி பாடுவது) ஆகும். அவர்களின் அழகிய செயல்கள் நன்மைகளாகும். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி கொடுக்கப்படும்.

இறைவன் ரமலானின் காலங்களையும், நேரங்களையும் அதன் மகத்துவம் கருதி மேன்மையாக வைத்துள்ளான். இந்த கால நேரங்களிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் பயனடைந்து கொள்ள வேண்டும்.

இந்த காலத்தை பாக்கியமாக நினைத்து, தமது ஆயுளை பாக்கியம் நிறைந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்ள வேண்டும். சொல்லையும், செயலையும் இறைதிருப்தியுடன் செயல்படுத்த வேண்டும்.

‘காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர’ என்று திருக்குர்ஆன் (103:1-3) குறிப்பிடுகிறது.

‘தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் மிகச் சிறந்தது இறையச்சமே. அறிவுடையாரே, என்னையே அஞ்சுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:197) வழிகாட்டுகிறது.

எனவே, இந்த ரமலானில் இறையச்சத்தையும், பேணுதலையும் வளர்த்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News