ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

நன்மைகள் தரும் ஐம்பெரும் கடமைகள்

Published On 2021-05-13 04:51 GMT   |   Update On 2021-05-13 04:51 GMT
‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)
னித ரமலானுக்கு ‘ஷஹ்ருத் துஹூர்’- தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இஸ்லாம் ஐந்து பெரும் கடமைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை: 1) கலிமா, 2) தொழுகை, 3) நோன்பு, 4) ஜகாத், 5) ஹஜ். இவை ஒவ்வொன்றுமே அதில் ஈடுபடக்கூடியவரை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கும், அதன் மூலம் அவர் வாழ்வில் நன்மைகளும், மேன்மைகளும் பெறுவார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அதுபற்றி காண்போம்.

கலிமா: ஒருவர் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினால், அவரின் முந்தைய அனைத்து பாவங்களும் அழிக்கப்பட்டு அவர் பரிசுத்தம் அடைகிறார்.

‘என் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையின்படி நான் இஸ்லாத்தை ஏற்றபோது, அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் முந்தைய பாவங்களை அழித்துவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

தொழுகை: ஒருவர் ஐந்துவேளைத் தொழும் போதும் அவரும் பாவ அழுக்கில் இருந்து விடுபட்டு தூய்மை அடைகிறார்.

‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக்கூறுங்கள்?’ என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐந்து வேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன்மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

ஜகாத்: இதன் பொருள் ‘வளர்தல், தூய்மைப்படுத்துதல்’ என்பதாகும். ஒருவர் தமது நிதியில் இருந்து ஜகாத்தை ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் அவர் உலோபித்தனத்தில் இருந்தும், பாவத்திலிருந்தும் தூய்மை பெறுகிறார். தானம் செய்ததால் அவரின் செல்வமும் வளர்ச்சி அடைகிறது.

‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)

ஹஜ்: ‘ஹஜ்ஜூம் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ருபின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

நோன்பு: ‘நோன்பு (பாவ அழுக்கிலிருந்து) காக்கும் ஒரு கேடயம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி).

தண்ணீர் எவ்வாறு உடலின் அழுக்கையும், உடையின் அழுக்கையும் நீக்கி சுத்தப்படுத்துகிறதோ, அவ்வாறே நோன்பும் உள்ளத்தின் அழுக்கையும், புறஉறுப்புகளின் அழுக்கையும் நீக்கி நோன்பாளியை தூய்மையாக்கி மேன்மை யான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால்தான் ரமலானுக்கு
தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப்பெயரும் ஏற்படக் காரணமாகி விட்டது.

உடல் சுத்தமும், உள்ள சுத்தமும் ஏற்படுவதினால் உடல் ரீதியான ஆரோக்கியமும், மனவலிமையும், நீண்ட ஆயுளும் கிடைத்து விடுகிறது.

நோன்பினால் சுத்தம் பெறுவோம், சுத்தம் அடைவதால் ஆரோக்கியம் பெறுவோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News