ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

உலகிலேயே சிறந்த மனிதர் ஆகவேண்டுமா?

Published On 2021-05-06 04:15 GMT   |   Update On 2021-05-06 04:15 GMT
‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.
புனித ரமலானுக்கு ‘ரபீஉல்குர்ஆன்’- ‘திருக்குர்ஆனின் வசந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. திருக்குர்ஆன் புனித ரமலான் மாதத்தில் தான் இறங்கியது.

‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.

‘உங்களில் சிறந்தவர் திருக்குர்ஆனை தானும் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்: புகாரி)

‘திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளசிச்செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது; அதன் வாடையும் வெறுப்பானது. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர் ஆவார். அதன் சுவை நன்று; அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்படக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

‘எவர் ஒருவர் இரவில் திருக்குர்ஆனின் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் பொடு போக்கானவராக எழுதப்படமாட்டார்; ஐம்பது வசனங்களை ஓதுபவர் இறைதியானிப்பவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; நூறு வசனங்களை ஓதுபவர் இறைவழிபாடு செய்தவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; இருநூறு வசனங்களை ஓதுபவர் இறையச்சம் உள்ளவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார். முன்னூறு வசனங்களை ஓதுபவர் வெற்றியாளராகவும், 500 வசனங்களை ஓதுபவர் பெரும் முயற்சியாளராகவும், ஆயிரம் வசனங்களை ஓதுபவர் பெரும் தங்கக்குவியலை பெற்ற பாக்கியசாலியாகவும் எழுதப்படுகிறார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

திருக்குர்ஆன் ஓதத் தெரியாதவர் இத்தகைய நற்பாக்கியங்களை அடையமுடிய வில்லையே என ஏங்க வேண்டாம். ஓதுவதை செவிமடுத்தாலும் அதற்கும் நன்மையும், அந்தஸ்தும் உண்டு.

‘திருக்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை தான் ஓதாமல், பிறர் ஓதுவதை செவியுறுபவருக்கு ஒரு நன்மை எழுதப்பட்டு, ஒரு பாவம் அழிக்கப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (நபிமொழி).

‘உங்களின் இல்லங்களை திருக்குர்ஆனை ஓதுவதைக் கொண்டு ஒளிமயமாக ஆக்குங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: லைஸ் பின் அபூசலீம் (ரலி), நபிமொழி)

“நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது”. (திருக்குர்ஆன் 17:9)

குர்ஆனை ஓதினால் மட்டுமே சத்தியமும், நேர்வழியும், பாக்கியமும் கிட்டிவிடாது. அதன்படி நடந்தால்தான் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

“நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்” (திருக்குர்ஆன் 86:13).

“நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடை யவர்களுக்கு நல்லுபதேசமாகும்” (திருக்குர் ஆன் 69:48).

புனித ரமலான் மாதம் திருக்குர்ஆனின் வசந்த மாதமாக இருப்பதால் இம்மாதத்தில் திருக்குர்ஆனை ஓதி நன்மைகளை அடையவும், மேன்மைகளை பெறவும் முயல வேண்டும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News