ஆன்மிகம்

முஸ்லிம்களின் புனித இரவு சிறப்பு தொழுகை நாளை நடக்கிறது

Published On 2019-05-31 04:01 GMT   |   Update On 2019-05-31 04:01 GMT
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களின் புனித இரவு சிறப்பு தொழுகை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக விளங்குவது ரம்ஜான். இறைதூதர் முகமது நபிக்கு திருக்குரான் அருளப்பட்டதை நினைவு கூர்ந்து ரம்ஜான் நோன்பின்போது முஸ்லிம்கள் திருக்குரானை தினந்தோறும் ஓதி வருகிறார்கள். அதன்படி 27 நாட்கள் திருக்குரான் ஓதி முடிக்கும் நாளாக வருகிற சனிக்கிழமை (நாளை) உள்ளது. இந்த நாள் முஸ்லிம்களின் புனித இரவாக இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறியதாவது:-

இறை தூதர் முகமது நபிக்கு ரம்ஜான் மாதத்தில் திருக்குரான் இறக்கப்பட்டது. எனவே ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது திருக்குரானை தினமும் படித்து வசனங்களை புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

திருக்குரானின் மொத்த வசனங்கள் 6 ஆயிரத்து 666 ஆகும். இதனை 27 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை பள்ளி வாசல்களில் ஓதி, அதற்கு விளக்கங்கள் கூறப்படும். 27-வது நாள் முழுமையாக திருக்குரான் ஓதி முடியும்நாள். இந்த நாள்தான் ‘லைலத்துல் கதர்’ எனப்படும் புனித நாளாகும். இந்த நாளில் சூரியன் மறையும் நேரத்தில் இருந்து அடுத்த நாள் சூரியன் உதிப்பதுவரை ஒரு முழு இரவும் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதப்படும். வசனங்களுக்கு பள்ளிவாசல் தலைவர்கள் விளக்கங்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். இந்த புனித இரவையொட்டி அனைத்து பள்ளி வாசல்களும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறினார்.

புனித இரவு தொழுகை நாளை (சனிக்கிழமை) இரவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறும். மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா தலைமையில் ஈரோடு டவுன் பெரிய பள்ளிவாசலில் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடக்கிறது.
Tags:    

Similar News