ஆன்மிகம்

உள்ளம் மகிழ உதவிடுங்கள்

Published On 2019-05-15 05:02 GMT   |   Update On 2019-05-15 05:02 GMT
எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமலான் மாதம் பற்றி குறிப்பிடும்போது ‘இது மனிதர்களுடன் கலந்துறவாடும் மாதம்’ என்பார்கள். இந்த ரமலான் மாதத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் சுகதுக்கங்களில் கலந்துறவாடுவது போன்ற நன்மையான காரியங்களில் அதிகம் ஈடுபடவேண்டும்.

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைக்கும் (ஸஹர்) நேரத்திலும், நோன்பு திறக்கும் (இப்தார்) நேரத்திலும் எவரேனும் ஒரு ஏழையை தன்னுடன் வைத்து அவருக்கும் உண்ணக்கொடுத்து, தானும் சாப்பிடுவார்கள். அப்படி யாரேனும் சாப்பிட வரவில்லை என்றால், எதுவுமே சாப்பிடாமல் பட்டினியாக நோன்பு வைப்பார்கள். தாங்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு கொடுப்பதை நபித்தோழர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

நோன்பு காலத்தில் ஒருநாள் ஹசரத் அலி(ரலி) அவரது மனைவி பாத்திமா(ரலி), அவர்களது மகன்கள் ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா(ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.

அலி (ரலி)யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்ஹம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்ஹம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்கள்.

பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஓட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி(ரலி)யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல பிறகு பணம் தாருங்கள் என்றார். அலி (ரலி)யும் அந்த ஓட்டகத்திற்கு 100 திர்ஹம் பணம் தருவதாக கூற வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது வேறு ஒருவர் அலி(ரலி)யிடம் இந்த ஓட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா என்றார். ஓட்டகத்திற்கு 1

60 திர்ஹம் விலை தருவதாகவும் கூறினார். அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்தை 160 திர்ஹமிற்கு விற்றார். அதில் 100 திர்ஹமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்ஹம் பணத்துடன் வீடு திரும்பினார்.

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள், ‘அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்ஹமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்’ என்றார்கள்.

எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

Tags:    

Similar News