ஆன்மிகம்

நன்மையான காரியங்கள்

Published On 2019-05-13 06:17 GMT   |   Update On 2019-05-13 06:17 GMT
புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது
புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது. இறைத்தூதர்கள் அனைவருக்கும் வேதங்களை வானில் இருந்து இறக்கி அருளினான் இறைவன். திருக்குர்ஆன் உள்பட அனைத்து வேதங்களும் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது.

நபி இப்ராகிம்(அலை) அவர்களுக்கு ‘சுஹ்பு’ என்னும் ஏடுகள் ரமலான் மாதம் முதல் நாளிலும், நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஜபூர்’ எனும் வேதத்தை 18-ம் நாளும், நபிமூசா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ எனும் வேதத்தை 12-ம் நாளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் 27-ம் நாளிலும் இறைவன் அருளினான்.

இது குறித்து திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து, நேரான வழியை தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

இந்த ரமலான் நோன்பு காலத்தில் அதிகமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். மறுமை நாளில் யாரும் யாருக்கும் எந்த பரிந்துரையும் செய்ய முடியாத நாளில் நாம் ஓதிய திருக்குர்ஆனும், கடைபிடித்த நோன்பும் சொர்க்கத்தை அளிக்கும் படி நமக்காக இறைவனிடம் பரிந்துரை செய்யும்.

‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உண்ணாமல், பருகாமல் உனக்காக நோன்பு இருந்தான். எனவே இவனுக்காக இன்று நான் (நோன்பு) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று நோன்பு கூறும்.

‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உறங்காமல் விழித்திருந்து திருக்குர்ஆன் ஓதினான். எனவே அவனுக்காக இன்று நான் (திருக்குர்ஆன்) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று திருக்குர்ஆன் கூறும்.

இந்த இரு பரிந்துரைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டு அந்த மனிதனை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பான்.

திருக்குர்ஆனை தவறாமல் ஓதி வரவேண்டும் என்பது குறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘நாம் யாருக்கு வேதத்தை கொடுத்ததோமோ அத்தகையோர், அவர்கள் அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள் தான் இதை அல்லாஹ்வின் வேதமென விசுவாசிப்பார்கள்: மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ அத்தகையோர் தான் நஷ்டவாளர்கள். (திருக்குர்ஆன் 2:121)

இத்தனை மகிமை நிறைந்த திருக்குர்ஆனை இந்த நோன்பு காலத்தில் நாம் அதிகமாக ஓதி இறையருளுடன் மறுமையில் சொர்க்கத்தையும் பெறுவோம், ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News