ஆன்மிகம்

இறைவனின் அருட்கொடைகள்

Published On 2019-03-02 04:13 GMT   |   Update On 2019-03-02 04:13 GMT
அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். பிறருக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.
அல்லாஹ் பிறரை விட நம்மை, செல்வத்திலும் செல்வாக்கிலும், அந்தஸ்திலும் உயர்வாக வைத்திருக்கின்றான் என்றால் நம்மிடம் உள்ள ஏதோ ஒரு நல்ல எண்ணத்தையோ, நல்ல செயலையோ அவன் பொருந்திக்கொண்டான் என்பதின் அடையாளம் தான் அது.

அது மட்டுமல்லாமல், நம் மூலம் பிறருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்கின்ற ஓர் எண்ணத்தையும் அல்லாஹ் வரையறுத்து வைத்திருக்கலாம். அதனால் தான் சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவை எல்லாம் குறிப்பிட்டவர்களால் உணரப்படாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கின்ற ஓர் உன்னத வாழ்வுமுறையை ஏற்படுத்தியுள்ளான். ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் தான் இவ்வுலகில் குழப்பம் என்பது இல்லை என்ற நிலையுள்ளது.

அல்லாஹ்வும் தன் திருமறையில் சொல்கின்றான்:

“வானங்கள், பூமியின் பொக்கிஷங்களின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். அவன் விரும்பியவர்களுக்கு சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்த்து களையும் மக்களின் தன்மைகளையும் நன்கறிந்தவன். ஆகவே அவர்களின் தகுதிக்கு தக்கவாறு கொடுக்கிறான்”. (திருக்குர்ஆன் 42:12)

‘மனிதனின் தகுதியையும் தன்மையையும் அறிந்து கொடுக்கின்றேன்’ என்று சொல்வதன் மூலம் தன் அடியானுக்கு கொடுப்பதை, அல்லாஹ் தன் வசம் தான் வைத்துள்ளான் என்பது நிரூபணம் ஆகிறது.

எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குவதற்கு, நம்மை படைத்த அல்லாஹ்வே பொறுப்பேற்று கொண்டுள்ளான். அனைத்து உயிரினங்களுக்கும் நேரடியாக வழங்காமல் ஒருவர் மூலம் அவற்றுக்கான வாழ்வாதாரங்களை வழங்குவதை அல்லாஹ் வழக்கமாக கொண்டுள்ளான். அதன் மூலம் பிறருக்கு உதவும் நல்ல வாய்ப்பையும் சிலருக்கு வழங்குகிறான்.

அல்லாஹ் அளித்துள்ள அந்த உயர்ந்த அந்தஸ்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு, “நான் தான் உதவி செய்கிறேன், என்னால் தான் இந்த காரியம் நிறைவேறுகிறது” என்று அகந்தை கொண்டால், அல்லாஹ் அவனைக்கொண்டு நாடிய அந்த நன்மையை நிறுத்தி விடுவான்.

“உங்களுக்கு வர வேண்டிய வாழ்வாதாரம் உங்களைச் சார்ந்து வாழும் பலவீனர்களைக் கொண்டே அல்லாமல் உங்களுக்கு அது வருவதில்லை” என்பது அருமை நாயகத்தின் அருள்மொழியாகும்.

இதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம்:

இறையச்சம் உள்ள நல்லடியார் ஒருவர், தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தனக்குரிய கடமைகளை வெகு நேர்த்தியாக செய்து வந்தார். அப்பழுக்கற்ற அவர் பணியை பாராட்ட எண்ணிய உரிமையாளர், அவருக்கு அறிவிக்காமலேயே அவருக்கு சம்பள உயர்வு வழங்கினார். ஆனால் அதைப்பற்றி எந்தவித சஞ்சலமும் கொள்ளாமல் அந்த ஊழியர் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் மிக அவசரமான சூழ் நிலையால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டார். வேலைகள் முடங்கி விட்டதன் காரணத்தால் உரிமையாளர் அவர் மீது கோபமுற்று அவரது சம்பளத்தைக் குறைத்து விட்டார். அதற்கும் அவர் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.

அலுவலகத்தின் உரிமையாளர் அவரை அழைத்து “நான் உனக்கு சம்பள உயர்வு தரும் போதும் உன்னிடம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. இன்று அதனைக் குறைத்து விட்டபோதும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த நிலைப்பாடு?” என்று வினவினார்.

“எனக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அல்லாஹ் அதற்குரிய வாழ்வாதாரத்தை உங்கள் மூலம் வழங்கினான். இப்போது என் தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்குரிய ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) அல்லாஹ் குறைத்து விட்டான். நம் அனைவருக்கும் பொறுப்பேற்று கொண்ட அல்லாஹ்வின் செயல்பாட்டுக்கு நாம் என்ன வரைமுறை சொல்ல முடியும்?” என்று பதிலுரைத்தார்.

இந்த உலகமே அல்லாஹ்வின் கட்டளையால் இயங்கிக்கொண்டிருக்கும் போது எந்தவித சக்தியும் இல்லாத நாம், ‘நம்மால் தான் இது நடக்கிறது’, என்று இறுமாந்து போவது எந்த வகையில் நியாயம்?

உறவினர்களோடு உரையாடும் சந்தர்ப்பத்தில், அந்த பேச்சு பிடிக்காத காரணத்தால், ஸஹத் இப்னு அபி வக்காஸ் (ரலி) என்ற நபித்தோழரின் வார்த்தைகளும் சற்று தடம்புரண்டு விட்டது. இதனை அறிந்த நபியவர்கள், அவர்களைக் கூப்பிட்டு கடிந்து கொண்ட வரலாறு ஒன்று உண்டு.

நபித்தோழர் அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்கள், தங்களின் உறவினர்கள் பலருக்கு நீண்ட காலமாக உதவிகளைச் செய்து வந்தார். அவர்களில் மிஸ்த்தா என்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி ஒரு தவறான செய்தியை பரப்புவதில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த காரணத்தில், அவர் மீது கோபம் கொண்டு, ‘நான் உனக்கு செய்யும் உதவியை இன்றோடு நிறுத்தி விடுவேன்’ என்று அபூபக்கர் (ரலி) சொல்லி விட்டார்கள்.

அவர்களின் அந்த செயலை அல்லாஹ் விரும்பாத காரணத்தால் அவர்களை கண்டித்து திருமறையில் ஒரு வசனத்தை இறக்கி விட்டான்.

“உங்களில் செல்வந்தரும், பிறருக்கு உதவி செய்ய இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழை களுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ தர்மம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா?. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்” (திருக்குர்ஆன் 24:22)

சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் என்று நன்மாராயம் சொல்லப்பட்ட அருமை சஹாபாக்களையே இது போன்ற சந்தர்ப்பங்களில் கடிந்து கொள்ளும் அல்லாஹ், நாம் அனாவசியமாய் தரம் தாழ்ந்து, உறவினர்களைப் பழிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வான்?.

எனவே நம் போன்றவர்களுக்கு அருள்மறையின் மூலம் இந்தச்செய்தியைச் சொல்கிறான் ஏக இறைவன்:

“தர்மம் செய்து அதை வாங்கியவனுக்கு துன்பம் தொடரும் படியாகச் செய்யும் தர்மத்தை விட அன்புடன் சொல்லும் இனிய சொல்லும் மன்னிப்பும் மிக்க மேலானதாகும். அல்லாஹ் எத்தேவையும் அற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்” (திருக்குர்ஆன் 2:263)

அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். பிறருக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.

இப்படிப்பட்ட நல்ல நிலையில் நம்மை வாழவைத்துக்கொண்டு இருக்கும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திட வேண்டும். அந்த நன்மையின் காரணமாக பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்விடம் சரணடைய வேண்டும். அதைவிடுத்து, நாம் கொடுக்கிறோம் என்ற காரணத்தால் பிறரை தாழ்வாக எண்ணி இகழ்வதையோ, என்னால் தான் எல்லாம் உனக்கு கிடைக்கிறது என்று ஆணவத்துடன் நடந்துகொள்வது தவறானது, அதனை தவிர்க்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் அத்தகைய நல்ல குணத்தை தந்து கிருபை செய்வானாக, ஆமின்.

எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News