ஆன்மிகம்
காயாரோகணேஸ்வரர் கோவில்

தோஷ பரிகாரத்திற்கு சிறந்த கோவில்

Published On 2021-06-29 08:11 GMT   |   Update On 2021-06-29 08:11 GMT
இந்த கோவில் மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.

நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.

இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.  

Tags:    

Similar News