ஆன்மிகம்
மீனாட்சி அம்மை, சுந்தரேஸ்வரர், தொட்டிலில் அருள்பாலிக்கும் சந்தான சுந்தரேஸ்வரர்.

புத்திர பாக்கியம் அருளும் கொத்தங்குடி சந்தான சுந்தரேஸ்வரர்

Published On 2021-04-27 08:16 GMT   |   Update On 2021-04-27 08:16 GMT
கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.
சோழமண்டலத்தில் தேவார பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இவற்றுள் கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும்.

புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.

குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.

மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
Tags:    

Similar News