ஆன்மிகம்
எமதர்மன் சன்னிதி

திருமணத் தடை நீக்கும் திருச்சிற்றம்பலம்

Published On 2020-09-01 09:22 GMT   |   Update On 2020-09-01 09:22 GMT
தஞ்சாவூர் திருச்சிற்றம்பலம் ஆலயத்தில் பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் எமதர்மன் சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற பெயரிலேயே ஒரு திருத்தலம் இருப்பதும், அங்கு சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் எவ்வளவு பெரிய சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான் என்ன தவம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. கையில் சூலாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கி, வலது காலை மடக்கி, இடதுகாலை தொடங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள் விலகிவிடுவதாக நம்பிக்கை.

சனிக்கிழமை தோறும் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்று கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு, தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர். எமன் சன்னிதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ அமைந்துள்ளது.

பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.
Tags:    

Similar News