ஆன்மிகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி

நோய், திருமண தடை நீக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி

Published On 2020-05-22 04:32 GMT   |   Update On 2020-05-22 04:32 GMT
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க சுவாமியை மனமுருக வழிபடுவதாலும், எந்த நோயாக இருந்தாலும் 41 நாட்கள் கடலில் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி&கன்னியாகுமரி சாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவில்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலை குல தெய்வமாக கொண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உவரிக்கு வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். குடும்பத்திலும், தொழிலிலும் மேன்மையைத் தருவதாக இந்த குல தெய்வ வழிபாடு அமைந்துள்ளது. பங்குனியில் குல தெய்வத்தை உவரிக்கு வந்து வழிபட்டால் தான் மனதில் நிம்மதி பிறக்கும் என்று லட்சோப லட்சம் குடும்பத்தினர் நம்புகிறார்கள். இதனால் பங்குனி மாதம் முழுவதும் உவரியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க சுவாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருகுவதாலும் தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களை கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும், துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை நிலை மேம்படுவதாகவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக இருக்கிறது.  

எந்த நோயாக இருந்தாலும் 41 நாட்கள் கடலில் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீர்ந்துவிடும்.  நொண்டி, கூன், குருடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இவரை வழிபட்டால் தீருகிறது.  கல்யாண வரம் வேண்டி வருவோருக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.

Tags:    

Similar News