ஆன்மிகம்
மாரியம்மன்

தாலிபாக்கியம் காக்கும் சுமங்கலி மாரியம்மன்

Published On 2020-04-02 02:30 GMT   |   Update On 2020-04-02 03:06 GMT
ராசிபுரத்தில் திருமணத் தடை நீக்கும் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கொண்டுள்ளார். கணவனை விட்டுப் பிரியாமல், எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று, இத்தல மாரியம்மனை இந்தப் பகுதி மக்கள் போற்றுகிறார்கள்.
ராசிபுரத்தில் திருமணத் தடை நீக்கும் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கொண்டுள்ளார். முன்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் ஒருவன், நோயால் அவதியுற்று படுத்த படுக்கையாக இருந்தான். மன்னனின் நோய் தீராததால் மிகவும் வருந்திய அவனது மனைவி, இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனை வழிபட வந்தாள்.

ஒரு கட்டத்தில் தாலிக்கொடியை இரு கைகளால் பிடித்துக் கொண்டு, கணவனை காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தாமல் அம்மனை வேண்டிக்கொண்டு இருந்ததால், மயக்கம் வந்து அங்கேயே விழுந்துவிட்டாள். அந்த பக்தையின் மீது இரக்கம் கொண்ட மாரியம்மன், சிற்றரசனின் நோயை குணமாக்கி அவனை எழுந்து நடமாடச் செய்தாள்.

தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிய அம்மனை நோக்கி, “எனது தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்த சுமங்கலி மாரியம்மனே” என்று மன்னனின் மனைவி நன்றி கூறினாள். இதையடுத்து அந்தப் பெயரே இத்தல அம்மனுக்கு நிலைத்து விட்டது.

பொதுவாக மாரியம்மன் கோவில்களில், திருவிழாக் காலங்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் ஒன்று நடப்படும். அந்த வேம்பு கம்பம், சிவபெருமானைக் குறிப்பதாக ஐதீகம். திருவிழா முடிந்ததும், வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் விட்டுவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை குறிக்கும் வேம்பு கம்பம், ஆண்டு முழுவதும் நடப்பட்டு இருக்கும்.

ஆகையால் கணவனை விட்டுப் பிரியாமல், எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று, இத்தல மாரியம்மனை இந்தப் பகுதி மக்கள் போற்றுகிறார்கள். எனவே இத்திருத்தலத்திற்கு வரும் பெண்கள், தங்கள் கணவர் உடல்நலம் பெற வேண்டியும், குடும்பப் பிரச்சினைகளை தீர்க்கக் கோரியும் கோவிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து, வேம்பு கம்பத்தில் ஊற்றி, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அம்மனை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.
Tags:    

Similar News