ஆன்மிகம்
விஷ்ணு

தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்

Published On 2020-03-30 07:03 GMT   |   Update On 2020-03-30 07:03 GMT
திருக்கோவில்களை தரிசனம் செய்வதுடன், இறைவனது நாமங்களை உச்சரித்து நம் பாவங்கள் நீங்கப்பெறுவது நமது கைகளில்தான் உள்ளது.
நாம் வாழும் இந்த பூமி, கர்ம பூமி என்று மகான்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, செய்த பாவங்களுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அடைந்து, அவை அளிக்கும் அனுபவங்கள் மூலம் நலம் பெற்று ஆன்மிக உயர்வை அடைவதே வாழ்வின் லட்சியமாக சொல்லப்படுகிறது. கடவுளே மனிதனாக வந்து இந்த உலகத்தில் பிறந்தாலும், அவரும் பூவுலக நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாக வேண்டும். மனிதனது செயல்களால் ஏற்படக்கூடிய பாவம் மற்றும் புண்ணியம் ஆகிய இரண்டு விளைவுகளும் எப்போதுமே, அவனை தொடர்ந்து வரக்கூடிய நிழல்களாக சொல்லப்படுகின்றன. அவற்றின் தன்மைகள் எந்த நிலையிலும் மாறுவதில்லை.

மனிதனது பாவ, புண்ணியங்கள் என்பது தாமாக ஏற்படுவதில்லை. ஒருவர் செய்யும் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மன சங்கடங்கள் மூலம் வெளிப்படும் வெப்பச் சிந்தனைகளின் பிரதி விளைவுகள்தான் சாபமாக வெளிப்படுகிறது. அவை, சம்பந்தப்பட்டவரின் வாழ்வியல் கணக்கில் பதிவாக அமைந்து, அனுபவமாக பலன் அளிக்கத்தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ஒருவரது சாபங்கள் எவ்வாறு அதற்கான அனுபவத்தை அளிப்பதற்கான காலநேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ, அதே போல புண்ணியங்களும் அவற்றை வெளிப்படுத்திக்கொள்ள தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன என்பதும் உலக நியதியாகும்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்புடையதாகச் சொல்லப்படுவது ராம அவதாரம். காரணம், அதில்தான் இறைவன், மனிதத் தன்மையோடு பிறந்து, அனைத்து துன்பங்களையும் தாங்கி, தர்மத்தின் வழியில் அதை சந்தித்து வென்றதாக அறிகிறோம். ராம அவதாரம் அடைந்த சிரமங்களை, மற்ற எந்த அவதாரமும் அடையவில்லை என்பதை பல சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மகாவிஷ்ணு தன்னுடைய வாமன அவதாரத்தில், மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தனது தவத்துக்காக தானமாக அளிக்கும்படி கேட்கிறார். அப்போது மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த சமயம். தர்ம சாஸ்திர நியதிப்படி எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு முன்னதாகவே தானம் செய்துவிட வேண்டும். அப்போதுதான் தொடங்க உள்ள சுப காரியம் நல்ல முறையில் பூர்த்தி அடையும். ஆனால் அதை மீறி வாமனருக்கு தானம் அளிக்க மகாபலி முடிவு செய்தான்.

அப்போது அவனது குரு சுக்ராச்சாரியார் உண்மையை அறிந்து கொண்டு, “உன்னை அழிக்க கடவுளே வந்திருப்பதால், தானம் அளிக்காதே” என்று தடுக்கிறார்.

ஆனால் மகாபலி, “நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதோடு கடவுளுக்கே தானம் அளிக்கும் அளவுக்கு, நான் உயர்ந்த நிலையில் இருப்பதை எண்ணி மனம் பூரிக்கிறேன்” என்றபடி, தானம் அளிக்க தயாரானான்.

தானம் அளித்தால் மகாபலிக்கும் கெடுதல் நேரும் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், அதை தடுக்க எண்ணினார். வாமனரின் கமண்டல நீரை மகாபலியின் கைகளில் வார்த்து நிலத்தை தானம் பெற நடந்த செயலை தடுக்க, வண்டாக மாறி கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார். அதை அறிந்த வாமனர், ஒரு தர்ப்பை புல்லால் குத்தி, வண்டை வெளியேற்றும்போது, சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்றடி மண் கேட்ட வாமனர், விஸ்வரூபம் கொண்டு முதல் இரண்டு அடிகளில் மண்ணுலகையும், விண்ணுலகையும் அளந்தார். “அடுத்த அடியை எங்கே வைப்பது?” என்று அவர் மகாபலியிடம் கேட்க, அவனோ “என் தலையில் வையுங்கள்” என்கிறான்.

அதன்படியே மகாபலியின் தலையில் பாதம் வைத்து அவனை பாதாளத்துக்கு அனுப்புகிறார், வாமனர். மகாபலியின் தலையில் கால் வைத்ததால், அவருக்கு பாவம் உண்டானது. அதன் காரணமாகத்தான், இறைவன் தன்னுடைய ராம அவதாரத்தில் 14 ஆண்டுகள் கால்களில் பாதுகை (காலணி) இல்லாமல் வனத்தில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காட்டுக்கு கிளம்பிய ராமனிடம் இருந்த அவனது பாதுகைகள், பூமியின் கர்ம விதிகளின் நியதியாக பரதனால் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் ராமன் வெறும் கால்களுடன் காட்டுக்குச் செல்ல வேண்டிய சூழலை உருவாகிவிட்டது.

இந்த பூவுலகின் தர்ம நியதிகள் மிகவும் சூட்சுமமாக அமைந்துள்ளதை பல மகான்கள் விளக்கி இருக்கின்றனர். ‘ஒரு பல்லி தனது இரையான ஒரு பூச்சியை பிடிப்பதை தடுப்பது பாவமா? அல்லது புண்ணியமா?’ என்ற கேள்விக்கு, அதற்கான பதிலும் சூட்சுமமாக அமைந்துள்ளது.

அதாவது, பல்லி பூச்சியை பிடித்தவுடன் அதை துரத்துவது பாவக்கணக்கில் கொள்ளப்படும். காரணம், அது பல்லியின் உணவுக்கான வாய்ப்பை தட்டி பறித்த பாவமாகிறது. ஆனால், பூச்சியை பிடிப்பதற்கு முன்னதாக பல்லியைத் துரத்தி விடுவது, ஒரு உயிரை காப்பாற்றிய புண்ணிய கணக்கில் சேர்க்கப்படும் என்பதே தர்ம நியதியின் சூட்சுமம் ஆகும்.

சாபமானாலும் சரி, பாவமானாலும் சரி அவற்றை அகற்றும் இடம் நாம் வாழும் இந்த பூமியாகும். அதிலும் குறிப்பாக நமது பாரத நாடும், அதில் உள்ள புண்ணிய தலங்களும், இறைவனது திருநாமமும் பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் மகத்தான தன்மை பெற்று விளங்குகின்றன. ஆகையால் திருக்கோவில்களை தரிசனம் செய்வதுடன், இறைவனது நாமங்களை உச்சரித்து நம் பாவங்கள் நீங்கப்பெறுவது நமது கைகளில்தான் உள்ளது.

கவிஞர் ஆவியூரான்
Tags:    

Similar News