ஆன்மிகம்
பாதாள புவனேஷ்வர்

நீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்

Published On 2020-03-23 03:57 GMT   |   Update On 2020-03-23 03:57 GMT
இயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு குகையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார்.
உத்ரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது, குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது.

இந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் குகை கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆலயம் ஒவ்வொருவருக்கும், ஏதோ தேவலோகத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.

பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் 154 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள விமான நிலையம், சுமார் 226 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் விமான நிலையம் ஆகும்.

Tags:    

Similar News