ஆன்மிகம்
நவரத்தினங்கள்

பிரச்சினைகளை தீர்க்கும் நவரத்தினங்கள்

Published On 2020-01-23 03:28 GMT   |   Update On 2020-01-23 03:28 GMT
ஒன்பது மணிகளை நவரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
பூமித் தாய் எல்லையற்ற கருணை உள்ளம் படைத்தவள்! தன் மக்கள் நீடித்த ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் பூரணமாக நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து அவள் அருளியுள்ளாள். இப்படிப்பட்ட அரிய பூமியில் அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகள்.இவற்றிற்கு அவரவர் அறிவுக்கு தக்க அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.

மனம் கனிந்த அன்னை சரியான வழியைக் காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக - அற நூல்களாக வடிவம் எடுத்தன.

அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப் பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப்பகுதி நவரத்தினங்களைப் பற்றியது. மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது இது. மூன்று முக்கிய சாஸ்திரங்களுள் முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.

ஆபத்துக் காலங்களிலும் அனைத்து சமயங்களிலும் உதவுவது மணி மந்திர ஒளஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர். மணி என்பதில் சோதிடம், வைத்தியம், வாஸ்து, எண் கணிதம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் இணைகின்றன. மினரல் எனப்படும் தாது பொருள்களை கணக்கி அடங்காத அளவில் பூமித்தாய் தந்திருக்கிறாள். அவற்றில் 300 அரிய தாதுக்களை அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.

இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் - உச்சி மேல் வைத்துக் கொண்டாடுகின்றன. ஒன்பது மணிகளை நவரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.

அவையாவன :


1. மாணிக்கம் 2. முத்து - 3.பவளம் 4.மரகதம் -5. புஷ்பராகம் - 6.வைரம் -7.நீலக்கல் 8.கோமேதகம் -9.வைடூரியம் - கருட புராணம், சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும் விரிவாக விளக்குகின்றன.இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில் இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப் பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.

ஆயுள் நீட்டிக்க ரத்தினக் கற்களை அணிக என்று ஆணையிடுகிறார் சரகர். தேர்ந்த மருத்துவரான இவர் நூறு வயது வாழ்வதற்கான வழிகளைத் தெள்ளத் தெளிவாக தனது சரக சம்ஹிதை நூலில் விளக்குகிறார். அதே நூலில் வெளியில் கிளம்பும் போது - ரத்தினக் கற்களைத் தொடாமல் (அணியாமல்) செல்லக் கூடாது. பெரியோர்களின் பாதங்களைத் தொடாமல் செல்லக் கூடாது.

நெய், நல்ல மங்களகரமான பொருள்கள், மலர்கள் இவற் றைத் தொடாமல் செல்லக் கூடாது. வணக்கத்திற்குரிய பெரியோர்கள், பூசிக்கப்படும் பொருள்கள் ஆகி யவை வலப்புறம் இருக்கும்படியும், சிறியவர்கள் இடப்புறம் இருக்கும் படியாகவும் உள்ள நிலையில் கிளம்ப வேண்டும். (அதாவது பூஜை செய்த பின் பெரியோர்களை வலமாகச் சுற்றிக் கிளம்ப வேண்டும்.)

இதை அடுத்து, அடுத்த சுலோகத்தில் ரத்தினக் கற்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ரத்னக் கற்களை கைகளில் அணியாமலோ, குளிக்காமலோ சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தும் அவர் மூலிகைகளை உடலிலே தரிக்குமாறும் அறிவுறுத்துகிறார். உலகில் உள்ள 750 கோடிப் பேர்களில் ஒருவர் போல ஒருவர் இல்லை. கை ரேகை தனி; கண்ணின் கரு விழித்திரை தனி. மரபணு தனி. அவர்களது ஆசையும் விருப்பமும் தேவையும் தனித் தனி தான்! உடல் வியாதிகளும், உள்ள மகிழ்ச்சிகளும் தனித் தனி தான்!

இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை அலசுவோம்:

மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும். முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்தேவதைகளை விலகச் செய்யும். புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும். வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.

நீலக்கல், ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இரு வகைப்படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.

கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது. இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது. கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

சூரியன்-மாணிக்கம், சந்திரன்-முத்து, செவ்வாய்-பவளம்,
புதன்-மரகதம், குரு-புஷ்பராகம், சுக்ரன்-வைரம்
சனி-நீலக்கல், ராகு-கோமேதகம், கேது-வைடூரியம்
ஆக நவ மணிகளும் கிரக தோஷங்களைப் போக்க வல்லவை.
ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு தனிக் கலை.

‘அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட கல்லை அணிந்தேன்; ஆனால் நல்லது நடக்கவில்லை; மாறாக நிலைமை மோசமானது’ என்று ஒருவர் சொன்னால் அது பொய்யாக இருக்காது. அவர் அணிந்திருந்த கல் உண்மையான, தோஷமற்ற கல்லா என்பதை ஆராய வேண்டும். ஆம், கற்களில் உள்ள தோஷங்கள் பல. அதுவும் இன்றைய அறிவியல் உலகில் செயற்கையாகச் செய்யப்படும் “கற்களை” அதிகப் பணம் கொடுத்து வாங்கி அணிந்து பயன் இல்லாதது மட்டுமன்றி இன்னும் அதிகக் கெடுதல் ஏற்பட்டால் மனம் நோவது இயற்கை தானே!

சாஸ்திரத்தைப் பழிக்காமல் அதைத் தந்த சதிகாரர்களைத் தான் பழிக்க வேண்டும்! ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக் கலையை அணுக வேண்டும். எல்லாத் துறைகளிலும் போலி கள் உள்ளனர் - அறிவியல் துறை உட்பட! ஆகவே முதலில் தினமும் சிறிது நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். அட, டி.வி. சீரியலுக்கு ஒதுக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கினால் கூட போதும், வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம். இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

கற்க கசடறக் கற்க இந்தக் கலையை; பின் அணிக அதற்குத் தக என்பது தான் நமக்கு உரித்தான சூத்திரம்.
சூஷ்மத்தைப் புரிந்து கொண்டால் வெற்றி தான் பெறுவோம்!
வாழ்க வளமுடன், நல் மணியுடன்!
Tags:    

Similar News